
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயங்களை உறுதிப்படுத்தினார்.
இலங்கை மின்சார சபையினால் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின்படி, மின் கட்டணத்தை சுமார் 13 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் முன்வைக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்த ஆரம்பக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில், தற்போது காணப்படும் உலகளாவிய நெருக்கடி நிலைமை உருவாகியிருக்கவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டண திருத்த யோசனை தற்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உள்ளது. மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான அனைத்து அதிகாரங்களும், அது தொடர்பான எதிர்கால தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பும் முழுமையாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உள்ளதுடன், அது தொடர்பான தீர்மானத்தை ஏப்ரல் முதலாம் திகதி அறிவிக்கும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு குறித்து ஆணைக்குழு இருமுறை சிந்திக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.