தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சருக்கு எதிராக முதன்முறையாக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (10) பிற்பகல் பாராளுமன்றத்தில் நூற்று நான்கு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும், எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
சமகி ஜன பலவேகய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.இன்று முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பமான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதுடன், சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா அவர்களால் விவாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
சமகி ஜன பலவேகய அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பித்த இந்த பிரேரணை மூலம் அமைச்சருக்கு எதிராக பல கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்துதல், தேசிய எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், கொள்முதல் நடவடிக்கைகளை ஊழல் நிறைந்த முறையில் கையாளுதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிட்டமை அவற்றில் முக்கியமானவை. அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு ஆணையை காட்டிக்கொடுத்து, மக்கள் மற்றும் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை மீளப்பெற முடியாத வகையில் இழந்துள்ளதால், அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் இருப்பது பொது நலன், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கு வலியுறுத்தினர். எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றதாக இருந்தாலும், அதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், நிலக்கரி இறக்குமதி செயல்முறை தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஒரு சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை முதல்வர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க விவாதத்தின் போது வெளிப்படுத்தினார். அதன்படி, 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 465 நிலக்கரி கப்பல்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஆணைக்குழு ஆராயவுள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி ஏதேனும் தவறு செய்திருந்தால் அவருக்கும், மேலும் வேறு தரப்பினர் தவறு செய்திருந்தால் அவர்களுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.