
நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றின் குளியலறையில் இருந்த பெண் வைத்தியர்கள் குழுவொன்றை இரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் இரண்டு உறுப்பினர்கள் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகத்திற்குரிய இளைஞர்கள் இருவரும் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பெண்கள் குளித்துக் கொண்டிருந்த காட்சிகளை இவ்வாறு வீடியோ பதிவு செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஹோட்டலில் நடைபெற்ற விசேட செயலமர்வு ஒன்றில் கலந்துகொள்ள வந்த ஒரு பெண் வைத்தியர் உட்பட 17 பெண்களைக் கொண்ட குழுவொன்று அங்குள்ள இரண்டு அறைகளில் தங்கியிருந்தது. அதே காலகட்டத்தில், கிரிக்கெட் பயிற்சிக்காக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு வந்திருந்த 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் ஏழு வீரர்கள் அதே ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், சந்தேகத்திற்குரிய இரண்டு வீரர்களும் அவர்களில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் உடனடியாக செயற்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சந்தேகநபர்களால் பெறப்பட்ட சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கண்டி பூஜாபிட்டிய மற்றும் பன்னல வெல்ப்பன்ன பிரதேசங்களைச் சேர்ந்த 19 வயதுடைய இந்த இரண்டு வீரர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய இரண்டு வீரர்களும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.