2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இடம்பெற்ற நிலக்கரி மோசடிகள் குறித்து விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி செயலாளரால் CID யிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

complaints-from-the-presidents-secretary-to-cid-to-find-coal-scams-from-2009-till-now

இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க அவர்களால் இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிலக்கரி இறக்குமதிகள் தொடர்பாகவும் முறையான விசாரணை இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது. பல்வேறு கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் பாராளுமன்ற விவாதங்களின் போது இந்த இறக்குமதி செயல்முறை தொடர்பாக எழுந்துள்ள பாரதூரமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி செயலாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதற்கிடையில், இந்த நிலக்கரி நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக முழு அதிகாரங்களைக் கொண்ட ஒரு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.




எரிசக்தி அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும், அதன் விசாரணை நடவடிக்கைகளுக்காக தற்போது சேவையில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post