கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றில் பதிவான மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 22 பேர் நேற்று (25) இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் தாய்லாந்தில் இருந்து வந்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 110 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' எனப்படும் போதைப்பொருள் தொகை பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இங்குள்ள சிறப்பு என்னவென்றால், இந்த போதைப்பொருள் தொகையை பௌத்த பிக்குகள் போன்று காவி உடை அணிந்த குழுவினர் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த குறிப்பிட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டத்தின் பிடியில் சிக்கியவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் உயர்கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ஆவர். ஒரு அனுசரணையாளரால் வழங்கப்பட்ட விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இவர்கள் தாய்லாந்துக்குச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்கு அவர்கள் காவி உடையைக் களைந்து சாதாரண உடையணிந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகள் அவர்களது கையடக்கத் தொலைபேசிகளை பரிசோதித்தபோது விசாரணை அதிகாரிகளால் கண்டறிய முடிந்துள்ளது.
சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு சொந்தமான பயணப் பைகளில் போலியான அடிப்பகுதிகளை உருவாக்கி, பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்பு வகைகளுக்கு இடையில் நுட்பமாக மறைத்து 110 கிலோகிராமிற்கும் அதிகமான இந்த போதைப்பொருள் தொகை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஒரு விமான நிலையத்திற்குள் காவி உடை அணிந்த குழுவினர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாக வரலாற்றில் பதிவாகிறது என்பதையும் சம்பந்தப்பட்ட பிரிவுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.