பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்த 7 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை.

the-country-banned-7-police-chiefs-who-had-relations-with-the-underworld

வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட ஏழு பொலிஸ் அதிகாரிகளுக்கு கம்பஹா பிரதான நீதவான் பந்துல குணரத்ன வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளார்.




வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டவர்கள், குறித்த குற்றப்பிரிவில் கடமையாற்றிய லிண்டன் லெனார்ட் சில்வா, கசுன் சுபாஷன, ரஞ்சித் ரணசிங்க, மனோஜ் பிரியதர்ஷன ஹேவாவசம், தாரக மதுரங்க அபேகோன், கோலித லக்மால் ராஜபக்ஷ மற்றும் டெரன்ஸ் செட்ரிக் பீரிஸ் ஆகிய அதிகாரிகளாவர். மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் தற்போதைய பொறுப்பதிகாரியும், பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஆர்.ஜி.சி. பதுமசிறி அவர்களால் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி கணேமுல்ல பொல்லத்த பிரதேசத்தில் பொலிஸ் பரிசோதகர் அஞ்சனவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 09 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோகிராமிற்கு அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் மங்கல சூராஜ் பெரேரா என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பு தொடர்பில், அந்தப் பிரிவின் அதிகாரிகள் சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக பொறுப்பதிகாரிக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில், குறித்த நடவடிக்கையுடன் தொடர்புடைய எட்டு அதிகாரிகள் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்த வட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வெளிநாடுகளில் மறைந்திருக்கும் ரஞ்சித் குமார திஸாநாயக்க என்ற 'கொண்ட ரஞ்சி' மற்றும் 'திப்பிட்டிகொட லஹிரு' ஆகிய கடத்தல்காரர்களுடன் இந்த அதிகாரிகள் தொடர்புகளைப் பேணி வந்துள்ளது தெரியவந்துள்ளது. கணேமுல்ல, பொல்லத்த பிரதேசத்தில் ஒரு வீட்டை சுற்றிவளைத்தபோது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட மூன்று கிலோகிராம் கொகைன், அந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் (88617) ஹேநாயக்க என்பவரால் கடத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கொகைன் தொகையை கொண்டு செல்வதற்காக குறித்த கான்ஸ்டபிள் வாடகைக்கு எடுத்த மோட்டார் கார் ஒன்றை பயன்படுத்தியுள்ளார், அந்தக் காரும் அதற்கான வாடகை ஒப்பந்தமும் தற்போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய அதிகாரிகள் வெளிநாடு சென்றால் மேலதிக விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்தில் கொண்ட நீதவான், குறித்த ஏழு அதிகாரிகளுக்கும் இந்த பயணத் தடையை விதித்ததுடன், அதனை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், விசாரணையின் முன்னேற்றத்தை உடனடியாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post