'க்ளீன் ஸ்ரீ லங்கா' (Clean Sri Lanka) தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 'கனவு இலக்கு' ரயில் நிலையங்கள் நூறை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு இணையாக, மருதானை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கல் பணிகளின் முதல் கட்டம் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அதன்படி, பயணிகளுக்காக அந்த புதிய வசதிகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டம் இலங்கை ரயில்வே திணைக்களம், க்ளீன் ஸ்ரீ லங்கா செயலகம், NIO இன்ஜினியரிங் நிறுவனம், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. மருதானை ரயில் நிலைய புனரமைப்பின் முதல் கட்டத்திற்காக சுமார் முப்பத்தைந்து மில்லியன் ரூபாய் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த முழுச் செலவையும் அக்பர் பிரதர்ஸ் (Akbar Brothers) தனியார் நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த ரயில் நிலையக் கட்டிடம் பல தசாப்தங்களாக எந்தவித புனரமைப்புக்கும் உட்படுத்தப்படவில்லை. எனவே, தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் சுமார் ஆறு மாத காலப்பகுதியில் இங்கு புனரமைப்புப் பணிகள் மிகவும் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, கட்டிடத்தில் நீண்டகாலமாக இருந்த நீர் கசிவுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு, இரண்டாயிரம் சதுர அடிக்கும் அதிகமான மேல் தளத்தின் கொங்கிறீட் கூரை நவீன கட்டுமான உத்திகளுக்கு அமைய நீர் புகாதவாறு (Waterproof) தரப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்பு கமரா அமைப்புகள் மற்றும் மின் விளக்கு அமைப்புகள் பொருத்துதல், நவீன உபகரணங்களுடன் கூடிய சுகாதார வசதிகளை நிறுவுதல், கட்டிடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் வர்ணம் பூசுதல் அத்துடன் சுற்றுச்சூழல் அழகுபடுத்தும் பணிகளும் இந்த முதல் கட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பலர் தினசரி மருதானை ரயில் நிலையத்திற்கு வருகிறார்கள். இதன் காரணமாக, இந்த ரயில் நிலையம் மேலும் பல கட்டங்களின் கீழ் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்த அமைச்சர், எதிர்கால நவீனமயமாக்கல் பணிகளை மேலும் முறையாக மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
