இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று கொழும்பு ரோயல் கல்லூரியின் திலான் சஞ்சன கருணாரத்ன என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். இந்த பெறுபேற்றை தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமை குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
திலான் தனது ஆரம்பக் கல்வியை தங்காலை ஆரம்பப் பாடசாலையில் பெற்று, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளைப் பெற்று கொழும்பு ரோயல் கல்லூரியில் அனுமதி பெற்றுள்ளார். பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி ஒன்பது 'ஏ' சித்திகளைப் பெற்றுள்ளார். அவரது தந்தை லசந்த கருணாரத்ன தொழிலால் ஒரு வர்த்தகர் ஆவார், அவரது தாயார் தில்கா சரணசிங்க ஒரு சிறப்பு மருத்துவர். அவர் தற்போது பொலன்னறுவை தேசிய சிறுநீரகவியல் வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றுகிறார்.
பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தான் பின்பற்றிய திட்டம் குறித்து விளக்கிய திலான், பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளின் பணிகளை அன்றாடம் உரிய முறையில் தாமதப்படுத்தாமல் செய்ததாகக் குறிப்பிட்டார். பரீட்சைக்கு முன் முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியதால், கடந்த கால வினாத்தாள்களைப் பற்றி விவாதிக்க தனக்கு அதிக நேரம் கிடைத்ததாகவும் அவர் கூறினார். தனது தாயின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகி நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்குவதே அவரது முக்கிய எதிர்பார்ப்பாகும்.
எதிர்காலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அவர் வழங்கும் முக்கிய அறிவுரை என்னவென்றால், தினமும் பாடசாலைக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்று, வழங்கப்படும் பணிகளை அன்றாடம் உரிய முறையில் முடிப்பதன் மூலம் நிச்சயமாக தங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை அடைய முடியும் என்பதேயாகும். இந்த மகத்தான வெற்றிக்குப் பின்னால் எப்போதும் உறுதுணையாக இருந்த தனது பெற்றோருக்கும், கொழும்பு ரோயல் கல்லூரியின் அதிபர் அநுல விஜேவர்தன, வகுப்பு ஆசிரியர் அமல் குணரத்ன மற்றும் வாலனி கலவான, துலானி, விக்ரம் செனவிரத்ன, ரங்க ஹெட்டிங்கே மற்றும் அச்சலா தர்மவிக்ரம ஆகிய அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
தனது மகனின் மகத்தான வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் தில்கா சரணசிங்க, இது தாங்க முடியாத மகிழ்ச்சியைத் தருவதாகவும், திலான் செய்த அர்ப்பணிப்புக்கு பெற்றோர்களுக்கு அவர் வழங்கிய சிறந்த பரிசு இது என்றும் கூறினார். திலான் சுயநலமின்றி மற்றவர்களையும் வெற்றிக்கு இட்டுச்செல்ல உதவும் மிகவும் அன்பான மற்றும் அதிர்ஷ்டசாலி குழந்தை என்றும் அவர் கூறினார். பாடசாலை வருகை வீதத்தை 87 சதவீதமாகப் பேணிய அவர், 12 மற்றும் 13 ஆம் தரங்களில் நடைபெற்ற கிட்டத்தட்ட அனைத்துப் பரீட்சைகளிலும் வகுப்பில் முதலிடத்தைப் பெற்றுள்ளார், இரண்டாம் இடம் பெற்றது மிக அரிது. அவர் படித்த ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்களின் அன்பைப் பெற்ற மாணவர் என்றும், ஆசிரியர்களின் மனதை ஒருபோதும் புண்படுத்தவில்லை என்றும் தாய் மேலும் கருத்துத் தெரிவித்தார்.