அம்பாறை பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கல்முனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 107 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சுயாதீனக் குழுவைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் தொகுதி கூரியர் சேவை மூலம் பொம்மைப் பொதி போல பாசாங்கு செய்து கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவை ஒரு சிறிய பொம்மை கரடிக்குட்டியின் கழுத்துப் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீடு பல மணி நேரம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பொம்மைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஐஸ் போதைப்பொருள் தொகுதியை விசாரணை குழுக்கள் கண்டுபிடிக்க முடிந்தது.
போதைப்பொருட்களுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு மின்னணு தராசு, இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபரான முன்னாள் உறுப்பினரும், வழக்குத் தொடர்பான பொருட்களும் மேலதிக சட்ட மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தற்போது கல்முனை தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த தேடுதல் நடவடிக்கை கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் அறிவுறுத்தல்கள் மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவுகளின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி அவர்களின் முழுமையான மேற்பார்வையிலும், அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பிற்கு, அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம். பிரியங்கர தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் குழு தீவிரமாகப் பங்களித்துள்ளது.