பாணந்துறை பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரின் சடலம், ஹொரணை திப்பட்டுக்கொட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (6) காலை தோண்டி எடுக்கப்பட்டது. ஹொரணை பிரதான நீதவான் லக்மினி விதானகம மற்றும் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சந்தகன் வடுவே ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன், அப்போது இரண்டு கோணிப்பைகளில் அடைக்கப்பட்டிருந்த சடலத்தின் பாகங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் பாணந்துறை, ஹிரண, கிரிபேரியா கல்போத்த வீதியில் வசித்து வந்த 31 வயதுடைய சந்துன் உதார அல்விஸ் அல்லது 'ஹாவா' என அழைக்கப்படும் ஒருவராவார். வாடகை முச்சக்கர வண்டி சாரதியான இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் ஒருவருடன் வாடகை பயணமொன்றை மேற்கொண்ட பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார். காணாமல் போன அவரது பச்சை நிற முச்சக்கர வண்டியின் நிறத்தை கருப்பு நிறமாக மாற்றி, இலக்கத் தகடுகளையும் மாற்றி பாதுக்க பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் அவரது மனைவியான சதுரி லக்ஷானி ஹிரண பொலிஸில் முறைப்பாடு ஒன்றையும் செய்திருந்தார்.
இந்த கொலை, துபாய் நாட்டில் மறைந்திருக்கும் சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுத் தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான 'குடு சலிந்து' என்பவரின் ஒப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் கண்டறிந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு பாணந்துறை பிங்வல பொது மயானத்தில் குடு சலிந்துவின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனிதக் கொலை தொடர்பான வழக்கில் பிரதான சாட்சியாக செயல்பட்டவர் கொலை செய்யப்பட்ட இந்த சந்துன் உதார என்பவரே. இதன் காரணமாக, குடு சலிந்து தனது சீடனான 'நிலங்க' அல்லது 'மாலுவா' மூலம் நான்கு பேருக்கு இந்த கொலை ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ரோஹான் ஓலுகலவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒருவரைக் கொலை செய்து திப்பட்டுக்கொட மயானத்தில் புதைத்த சம்பவம் தொடர்பில் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மூவர் வலான மத்திய ஊழல் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலை இடம்பெற்று சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த சந்தேகநபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மில்லனிய பிரதேச சபையின் ஊழியர்களின் உதவியுடன் இந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட கோணிப்பைகளுக்குள் தங்குஸ் நூல் ஒன்றும் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளதுடன், அதைக் கொண்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ரோஹான் ஓலுகல தலைமையிலான பொலிஸ் குழுவினர், பாணந்துறை கோட்ட குற்றவியல் தடயவியல் ஆய்வக அதிகாரிகள், ஹொரணை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரங்க பெரேரா மற்றும் குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி ரசிக பிரசாத ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த சம்பவத்தை பார்வையிடுவதற்காக பிரதேசவாசிகளும் மயானத்திற்கு வந்திருந்தனர்.