பிரபல பாடசாலையொன்றின் விளையாட்டு ஆசிரியர் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டார்

a-sports-teacher-of-a-public-school-was-arrested-for-drug-trafficking

துபாய் இராச்சியத்தில் தலைமறைவாக உள்ள பாதாள உலக தலைவனின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய மூவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச பாடசாலை ஒன்றின் விளையாட்டு ஆசிரியர் ஒருவரும், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற சிப்பாய் ஒருவரும் தங்குவ பிரதேசத்திலும், பத்தொன்பது வயதுடைய மற்றுமொரு இளைஞன் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்திலும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




சிலாபம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (01) தங்குவ கட்டுக்கெந்த பிரதேசத்தில் வெள்ளை நிற கார் ஒன்றை சோதனை செய்தபோது, 8 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற சந்தேகநபரான விளையாட்டு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இந்த நபர் பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான அரச பாடசாலையில் பணிபுரிபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பயன்படுத்திய காரும் தற்போது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கட்டுக்கெந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சுற்றிவளைப்பில், 20 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த முன்னாள் இராணுவ சிப்பாயும் அதே குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் குளியாப்பிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். 37 வயதுடைய இந்த சந்தேகநபர் நிகவெரட்டிய, மஹவ, கரம்பே பிரதேசத்தைச் சேர்ந்தவர்.




இவ்வாறு தங்குவவில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாயும், கொச்சிக்கடையில் கைது செய்யப்பட்ட பத்தொன்பது வயது இளைஞனும் ஒரே போதைப்பொருள் வலையமைப்பின் உறுப்பினர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் தெரிவித்தபடி, இவர்களை இயக்கியவர்கள், தற்போது துபாய் இராச்சியத்திற்கு தப்பிச் சென்றுள்ள தங்குவ பிரதேசத்தைச் சேர்ந்த 'அடா' என்ற புனைப்பெயரில் அறியப்படும் ஆர்.ஏ. சமன் குமார என்ற பாதாள உலக கும்பல் தலைவனும் அவரது மனைவியும் ஆவர்.

Post a Comment

Previous Post Next Post