அமெரிக்காவின் ஆதரவை இழந்ததால், சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான சட்டமியற்றும் பணிகளை பிரித்தானிய அரசாங்கம் இடைநிறுத்த வேண்டியிருந்தது. வரவிருக்கும் சில வாரங்களில் முடிவடையவுள்ள தற்போதைய பாராளுமன்ற அமர்வில் இந்த மசோதாவை நிறைவேற்ற போதுமான நேரம் இல்லை என்பதை பிரித்தானிய அதிகாரிகள் அண்மையில் ஒப்புக்கொண்டனர்.
அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து நடத்தி வரும் டியாகோ கார்சியா இராணுவத் தளம் அமைந்துள்ள இந்தத் தீவுகளை ஒப்படைப்பதில் ஏற்பட்ட இந்த தாமதம், ஈரானியப் போர் தொடர்பாக கீர் ஸ்டார்மரின் நடவடிக்கைகள் குறித்து டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சீரழிந்ததற்கான தெளிவான அறிகுறியாகக் கருதப்படுகிறது.முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பிரித்தானியா சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும், மேலும் கூட்டு இராணுவத் தளத்தை தொடர்ந்து நடத்துவதற்காக மிகப்பெரிய தீவான டியாகோ கார்சியாவை 99 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் பெறவிருந்தது. இந்தத் திட்டம் அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், தீவுகளின் இறையாண்மையை மாற்றுவது ஒரு பெரிய தவறு என்று கூறி அமெரிக்க ஜனாதிபதி சமீபத்தில் அதை விமர்சித்தார். இருப்பினும், அதற்கு முன்னர் பிப்ரவரி மாதத்திலும், கடந்த ஆண்டு ஸ்டார்மர் வெள்ளை மாளிகைக்குச் சென்றபோதும், டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை சூழ்நிலைகளின் கீழ் அடையக்கூடிய "சிறந்த" ஒப்பந்தமாக அங்கீகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியமைத்ததற்கான முக்கிய காரணம், ஈரானுக்கு எதிராக முன்கூட்டிய தாக்குதலை நடத்துவதற்கு பிரித்தானிய தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்காதது என்று கூறப்படுகிறது. கீர் ஸ்டார்மர் அமெரிக்கப் படைகளுக்கு டியாகோ கார்சியா போன்ற பிரித்தானிய தளங்களை ஈரானுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளார். பிரித்தானிய தளங்களில் இருந்து மேலும் தாக்குதல்களை நடத்த அமெரிக்காவை அனுமதிப்பது பிரித்தானியர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்து, ஈரான் கடந்த மாதம் இந்த கூட்டு இராணுவத் தளத்தின் மீது தாக்குதலையும் நடத்தியது.
இந்தத் தீவுகள் தொடர்பான 1966 அமெரிக்க-பிரித்தானிய ஒப்பந்தத்தை திருத்துவதற்கு அமெரிக்கா உத்தியோகபூர்வமாக கடிதப் பரிமாற்றம் செய்யாததும், மசோதாவை கைவிட பிரித்தானியாவை பாதித்த மற்றொரு காரணமாகக் கருதப்படுகிறது. அதன்படி, மே மாதம் நடைபெறவுள்ள அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்தும் மன்னரின் உரையில் புதிய சாகோஸ் மசோதா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேட்னோக், பிரித்தானியாவிற்கு சொந்தமான ஒரு பிரதேசத்தை ஒப்படைத்து, ஏற்கனவே தங்களிடம் உள்ள இராணுவத் தளத்தைப் பயன்படுத்த 35 பில்லியன் பவுண்டுகள் செலுத்த முயன்ற பிரதமரின் நடவடிக்கை இதன் மூலம் தெளிவாகிறது என்று கூறினார்.
1965 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசம் என்று பெயரிடப்பட்டு மொரிஷியஸிலிருந்து பிரிக்கப்பட்ட இந்தத் தீவுக் கூட்டத்திலிருந்து, அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். 1968 இல் மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது, அன்றிலிருந்து இடம்பெயர்ந்த சாகோஸ் மக்கள் இழப்பீடு கோரி பிரித்தானிய நீதிமன்றங்கள் மூலம் பல சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹமிஷ் பால்கனர் அமெரிக்க சகாக்களுடன் பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்தாலும், பின்னர் வெளியுறவு அலுவலகம் அதை சரிசெய்து, பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்படவில்லை அல்லது குறிப்பிட்ட காலக்கெடு இல்லை என்றும், வழக்கம் போல் அட்டவணைகள் வெளியிடப்படும் என்றும் அறிவித்தது.