
சமீபத்தில் புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, அதன் ஒரு பகுதியை திருடிய சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (11) களனி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட சொத்துக்களின் ஒரு பகுதியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த 08ஆம் திகதி இந்தப் பேருந்து நிலையம் விரிவாக புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட பின்னரே இந்தச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முதல் முறைப்பாடு அப்பேருந்து நிலையத்தின் நலன்புரிப் பிரிவினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக 33 வயதுடைய களனி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட மொத்த சேதத்தை சரியாக மதிப்பிடுவதற்கு இலங்கை விமானப்படையின் உதவி பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி விமானப்படையினால் விசேட மதிப்பீட்டு அறிக்கை கோரப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.