2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் போர், 'ஒப்பரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதுவரை 2,076 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 26,500 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் மத்திய ஈரானின் இஸ்ஃபஹான் (Isfahan) பகுதிக்கு தெற்கே அமைந்துள்ள பஹாரெஸ்தான் (Baharestan) மீது தொடர்ச்சியான பலமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதனால் முக்கிய தொழில்துறை மற்றும் ஏவுகணை தொடர்பான உள்கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல்களால் எஃகு ஆலைகள் மற்றும் மருந்து ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு சேதம் ஏற்பட்டதால், நாட்டின் தேசிய மருத்துவ விநியோக வலையமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கியமான இடங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், போர் நிலைமை மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களை ஈரான் போர்க்குற்றங்கள் என அறிவித்துள்ளது.
கூடுதலாக, ஏவுகணை ஏவுதல் விநியோக வலையமைப்பை இலக்காகக் கொண்டு, மத்திய கிழக்கின் மிக உயரமான பாலங்களில் ஒன்றான டெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜ் B1 (Karaj B1) பாலம் இரண்டு முறை தாக்கப்பட்டு அதன் முக்கிய பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 95 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) கணக்கில் ஒரு காணொளியை வெளியிட்டு, "ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்துவிட்டது, அவர்கள் தாமதமாவதற்கு முன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், இதைவிடவும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்" என்று கூறியுள்ளார். ஈரான் அதை மேலும் வலிமையாகவும் வேகமாகவும் மீண்டும் கட்டியெழுப்புவதாகவும், தாக்குதல்களுக்கு அழிவுகரமான பதிலடி கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
இத்தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் மத்திய பகுதிகளை நோக்கி 10 முதல் 20 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால் பெட்டா டிக்வா (Petah Tikva) பகுதியில் உள்ள தொழில்துறை கட்டிடங்கள் மற்றும் பல வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. டெல் அவிவ் மற்றும் பெனெய் பிராக் பகுதிகளில் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளால் பெரும்பாலான ஏவுகணைகள் அழிக்கப்பட்டாலும், அதன் கிளஸ்டர் குண்டு பாகங்கள் விழுந்ததில் 11 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 5 முதல் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதேவேளை, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது சுமார் 60 ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது தங்கள் பழிவாங்கலின் ஆரம்பம் மட்டுமே என்று ஈரான் தெரிவித்துள்ளது.
தங்கள் நிலப்பரப்பில் நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தும் வரை பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்த ஈரான், தனது தாக்குதல் எல்லையை வளைகுடா பிராந்தியம் வரை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் தொட்டி வளாகம், பஹ்ரைனில் உள்ள சிவில் வசதிகள் மற்றும் கத்தார் நாட்டிற்கு அப்பால் உள்ள ஒரு கப்பல் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை முறியடித்துள்ளன. இதன் காரணமாக, குவைத் மற்றும் பஹ்ரைன் அதிகாரிகள் தங்கள் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு எச்சரித்துள்ளனர். மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க கப்பல்கள் போன்ற சில கப்பல்களுக்கு மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளன.
இந்த சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் நோக்கங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், ஈரான் இனி அச்சுறுத்தலாக இல்லாததால், அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமலேயே அடுத்த 2-3 வாரங்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணை சுதந்திரமாகவும் திறந்த நிலையிலும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இருப்பினும், ஈரான் போர் நிறுத்தத்தை கோரியதாக அமெரிக்க ஜனாதிதிபதி கூறிய கூற்று பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் இதைவிடவும் அழிவுகரமான தாக்குதல்களை நடத்துவதாக எச்சரித்துள்ளது.
இந்த மோதல்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 24 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரானின் லாரெஸ்தான் (Larestan) பகுதியில் உள்ள ஒரு புல்வெளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் உட்பட, அந்நாட்டில் பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்த போர் விரிவடையும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா உட்பட 40 நாடுகள் ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் நடத்திய தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளன. அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளின்படி, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்களில் சுமார் 50 சதவீதம் இன்னும் நிலத்தடி சுரங்கங்கள் வழியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
போர் காரணமாக ஈரானில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மக்கள் போராட்டங்கள் எழுந்துள்ளன. தொடர்ச்சியான தாக்குதல்களின் காரணமாக பாதுகாப்பு அறைகளில் நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதால், இஸ்ரேலிலும் பொருளாதார நெருக்கடி நிலை உருவாகி வருவதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சீனாவுக்கு சட்டவிரோத எண்ணெய் போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உலகளாவிய சந்தை கடுமையான ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ளது.