மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், விசேட வாகனப் பதிவு இலக்கங்களை வழங்கும் ஒரு பொறிமுறையின் மூலம், கடந்த நான்கு வருட காலப்பகுதியில் 118 கோடி ரூபா பாரிய வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது. தற்போதுள்ள சாதாரண இலக்க வரிசையை விட ஒரு இலட்சம் இலக்கங்கள் முன்னால் உள்ள விசேட இலக்கத் தகடுகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவிடம் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.
இந்த விசேட வசதியின் கீழ் பல வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு இலக்கங்களைப் பெற்றுள்ளமை தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் 11 வாகனங்களுக்கும், 2024 ஆம் ஆண்டில் 46 வாகனங்களுக்கும் இந்த இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டளவில் இந்த தேவை 692 வாகனங்களாக வேகமாக அதிகரித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு கடந்துள்ள காலப்பகுதியில் மட்டும் 436 வாகனங்களுக்கு இவ்வாறு விசேட இலக்கங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு இலட்சம் இலக்கங்கள் முன்னோக்கிச் சென்று ஒரு விசேட இலக்கத்தை ஒதுக்கீடு செய்வதற்கு ஒரு இலக்கத்திற்கு ஒரு மில்லியன் ரூபா (பத்து இலட்சம்) அறவிட அரசாங்க நிதிக்குழு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கட்டண முறைமையின் கீழ், தற்போதுள்ள சாதாரண இலக்கத்திற்கு அப்பால் ஒரு இலக்கத்தைப் பெற குறைந்தபட்சம் ரூ. 100,000 செலுத்த வேண்டும். ஒரு இலட்சம் ரூபாவுக்கு அடுத்த 10,000 இற்குள் ஒரு இலக்கத்தையும், 2 இலட்சம் ரூபாவுக்கு அடுத்த 20,000 இற்குள் ஒரு இலக்கத்தையும் இவ்வாறு கொள்வனவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 50,000 முதல் 100,000 இற்குள் இலக்கங்களைப் பெற ஒரு மில்லியன் ரூபா அறவிடப்பட்டது.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவின் முன் அழைக்கப்பட்டபோது கவனத்தில் கொள்ளப்பட்ட மற்றொரு விசேட விடயம் என்னவென்றால், உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமல் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இந்த கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இந்த விசேட இலக்கங்களை வழங்கும் செயல்முறை மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி வேன்கள் ஆகிய வாகன வகைகளுக்குப் பொருந்தாது. இந்த வகைகளில் இருந்து விலக்கப்படும் வேறு எந்த மோட்டார் வாகனத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பின்னர் இந்த விசேட இலக்கத் தகடுகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.