பிரேசில் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் லாரா கார்டோசோ, இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீரர் அல்லது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். லெசோதோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், மூன்று ஓவர்கள் மட்டுமே வீசி, நான்கு ஓட்டங்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை (9-4) வீழ்த்தி இந்த சிறப்பான சாதனையை அவர் நிகழ்த்தினார்.
203 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய வெற்றி இலக்கை துரத்திய லெசோதோ அணியை, கார்டோசோவின் இந்த வலுவான பந்துவீச்சு 6.2 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. இந்த சிறப்பான சாதனையுடன், இதற்கு முன்னர் பூட்டானின் சோனம் யேஷே 2025 இல் மியான்மருக்கு எதிராக ஒரு ஆண்கள் இருபதுக்கு 20 போட்டியில் ஏழு ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வைத்திருந்த ஒட்டுமொத்த சாதனையும், அத்துடன் 2024 இல் இந்தோனேசியாவின் ரோஹ்மாலியா ரோஹ்மாலியா மங்கோலியாவுக்கு எதிராக ஓட்டங்கள் எதுவும் வழங்காமல் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி பெண்கள் கிரிக்கெட்டில் வைத்திருந்த சாதனையும் முறியடிக்கப்பட்டது.
இருபத்தொரு வயதுடைய இந்த இளம் வீராங்கனை தனது விக்கெட் வேட்டையை தொடர்ச்சியாக வீசிய ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆரம்பித்தார். அப்போது அவர் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி மூன்று பந்துகளிலும், நான்காவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் விக்கெட்டுகள் வீழ்ந்தன, அப்போது லெசோதோவின் ஸ்கோர்போர்டு எட்டு ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்று பதிவாகியிருந்தது. அதோடு நிற்காமல், அவர் நான்காவது ஓவரின் எஞ்சிய பந்துகளில் மேலும் இரண்டு விக்கெட்டுகளையும், ஐந்தாவது ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
எவ்வாறாயினும், லெசோதோ இன்னிங்ஸின் கடைசி விக்கெட்டாக லிண்டிவே பொலாக்கியை ஸ்டம்பிங் மூலம் மேரியன் ஆர்ட்டர் வீழ்த்தியதால், கார்டோசோவுக்கு ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் அரிய வாய்ப்பு கைநழுவிப் போனது. பொலாக்கி அந்தப் போட்டியில் ஒரு ஓட்டமாவது எடுத்த லெசோதோவின் மூன்று பேட்டர்களில் ஒருவர் ஆவார்.
முதல் ஸ்லிப் பீல்டராக நின்று கார்டோசோவின் அனைத்து விக்கெட்டுகளையும் நேரில் கண்ட பிரேசில் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரொபேர்ட்டா மொரெட்டி, லாரா எதிர்காலத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உயர்மட்ட கிரிக்கெட் விளையாடக்கூடிய அபரிமிதமான திறமைகொண்ட வீராங்கனை என்று கூறினார். பிரேசிலின் அடிமட்ட திட்டங்கள் மூலம் வந்த அவர், நாட்டிலிருந்து உருவான சிறந்த வீராங்கனை என்றும், அவரது அர்ப்பணிப்பையும் விளையாட்டு மீதான ஆர்வத்தையும் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.
போட்ஸ்வானாவின் தலைநகரான கபரோனில் ஆறு அணிகள் பங்கேற்கும் கலஹாரி மகளிர் இருபதுக்கு 20 தொடரின் கீழ் இந்த போட்டி நடைபெற்றது, பிரேசில் அணி இதுவரை எதிர்கொண்ட ஐந்து போட்டிகளிலும் தோல்வியின்றி உள்ளது.