
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் மீண்டும் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்ததை அறிந்தும் கிரேக்க பிணைமுறிகளை வாங்கியதன் மூலம் இலங்கை அரசுக்கு 184 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த, மூன்று மாதங்களுக்குள் 100 மில்லியன் ரூபாய் தொகையை வைப்புச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மீறியதன் காரணமாக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 67 (5) பிரிவின் கீழ் இவ்வாறு புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த பரிவர்த்தனை தொடர்பாக இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அஜித் நிவாட் கப்ரால் அவர்களுக்கு மேலதிகமாக மேலும் ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கே.ஜி.டி. தர்மசேன தீரசிங்க, வசந்த ஆனந்த சில்வா, தண்டசிறி ஜயசிங்க, பண்டித சிறிவர்தன மற்றும் எச்.ஏ. கருணாரத்ன ஆகியோர் அந்த பிரதிவாதிகள் ஆவர். பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க அவர்களினால் இலஞ்ச ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் பின்னர் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், பின்னர் பிரதிவாதிகளினால் மூன்று மாதங்களுக்குள் 100 மில்லியன் ரூபாய் தொகையை வைப்புச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைக்கு இணங்கியதன் பேரில் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 67 (3) பிரிவின் பிரகாரம் இலஞ்ச ஆணைக்குழுவினால் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இந்த வழக்கின் சட்டப் பின்னணியைக் கருத்தில் கொள்ளும்போது, ஆரம்பத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் சட்டபூர்வமான செல்லுபடியை சவால் செய்து பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தனர். அந்த ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெண்டிகே அவர்கள், 2024 மே 31 ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்படாமலேயே அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார். அதோடு நிற்காத இலஞ்ச ஆணைக்குழு, 2024 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அதே குற்றச்சாட்டுகளின் பேரில் மீண்டும் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தது.
இரண்டாவது தடவையாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று கூறி பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் ஒரு ஆரம்ப ஆட்சேபனையை முன்வைத்த போதிலும், இம்முறை உயர் நீதிமன்ற நீதிபதி அந்த ஆட்சேபனையை நிராகரித்து வழக்கை விசாரணைக்கு எடுக்கத் தீர்மானித்தார். அந்த நிலைமையின் கீழ், மேலே குறிப்பிட்ட 100 மில்லியன் ரூபாய் வைப்புச் செய்யும் நிபந்தனைக்கு உட்பட்டு வழக்கை வாபஸ் பெற இலஞ்ச ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது. இருப்பினும், அந்த உடன்படிக்கையின்படி குறித்த காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பணத்தை வைப்புச் செய்து நிபந்தனையை பூர்த்தி செய்யத் தவறியதன் காரணமாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக மட்டும் இவ்வாறு மீண்டும் ஒருமுறை உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க இலஞ்ச ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.