15 வயது சிறுமிக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அத்தமஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று (13) உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை வழங்குவதற்கு முன்னர், நீதவான் கொழும்பு நவலோக மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தேகத்திற்குரிய தேரரின் நிலையை அவதானிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட மருத்துவ பரிந்துரைகளை கருத்தில் கொண்டு அவரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.
எவ்வாறாயினும், நேற்று (12) அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அத்தமஸ்தானாதிபதி தேரரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன மறுத்துவிட்டார். அதற்குக் காரணமாக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 08 நீதவானின் உத்தரவு தனது நீதிமன்றத்திற்கு இன்னும் கிடைக்காததே என்று பிரதான நீதவான் சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க தமக்கு சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் நீதவான் அங்கு வலியுறுத்தினார்.
சந்தேகத்திற்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரரை அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதது தொடர்பாக வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர், அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் பிரசாத் பிரேமதிலக்க ஊடாக மருத்துவ அறிக்கையொன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். தொலைதூரப் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு போதுமான நல்ல உடல்நலம் சந்தேகத்திற்குரிய தேரருக்கு இல்லை என்றும், அவருக்கு பல சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியிருப்பதாலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இதன் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.