அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் ரஷ்யப் பிரஜை ஒருவரின் கைப்பைக்குள் இருந்த 9,900 அமெரிக்க டாலர்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர். முப்பத்தொரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இந்தப் பணத்தைத் திருடிய சந்தேகநபர், கொழும்பு கோட்டைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சூதாட்ட விடுதியில் தங்கியிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கு பாதிக்கப்பட்டவர் ரஷ்ய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு முக்கிய புலம்பெயர் மருத்துவர் ஆவார்.கடந்த 30ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்ட எடிஹாட் விமான சேவைக்குச் சொந்தமான EY-394 விமானத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ரஷ்ய மருத்துவர் விமானப் பயணத்தின் போது உறங்கிக் கொண்டிருந்த வேளையில், பயணப் பொதிகளை வைக்கும் அடுக்கில் இருந்த அவரது கைப்பையிலிருந்து சந்தேகநபரான சீனப் பிரஜை இந்தப் பணத்தைத் திருடியுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த பின்னர் தனது பையில் பணம் இல்லை என்பதை உணர்ந்த மருத்துவர், அன்றைய தினம் அதிகாலை 4.00 மணியளவில் விமான நிலையப் பொலிஸில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்பை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது, குறித்த விமானத்தில் வந்த ஒரேயொரு சீனப் பிரஜையான இந்த நபர் மிகவும் சூட்சுமமாக பாதுகாப்பு கெமராக்களைத் தவிர்த்து விமான நிலையத்திலிருந்து வெளியேறி வாடகை வண்டியில் தப்பிச் செல்லும் காட்சியை பொலிஸாரால் அவதானிக்க முடிந்துள்ளது. பின்னர் அந்த வாடகை வண்டி சேவை கவுண்டர் மூலம் சந்தேகநபர் பயணித்த இடத்தை துல்லியமாக அடையாளம் காண புலனாய்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி உடனடியாக கொழும்பு கோட்டைப் பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த சூதாட்ட விடுதிக்குச் சென்ற பொலிஸ் குழு, அங்குள்ள பாதுகாப்பு கெமராக்களையும் பரிசோதித்த பின்னர் 49 வயதுடைய இந்த சீனப் பிரஜையை கைது செய்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் எல்மோ மால்கம் பேட் அவர்களின் நேரடி வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீவரத்ன, பொலிஸ் பரிசோதகர் மதுசங்க, புலனாய்வு அதிகாரி மஞ்சுல மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான விக்ரமசிங்க (102313) மற்றும் மதுசங்க (27167) ஆகியோர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். சந்தேகநபர் 01ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.