யட்டியாந்தோட்டை, கொழும்பு பழைய வீதியில் உள்ள சிறிவர்தன பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இரவு கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக யட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, கரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஹோரவல அருண தீப்தி சேனரத் ஜயக்கொடி என்ற உப பொலிஸ் பரிசோதகரே இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.இந்த பொலிஸ் அதிகாரி தனது கடமை ஓய்வு நேரத்தில், கரவனெல்ல நகரில் இருந்த தனது மகனை யட்டியாந்தோட்டையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் யட்டியாந்தோட்டை நகருக்கு அருகில் வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளுடன் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வீடொன்றை நோக்கி கவிழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த மகன் உடனடியாக கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகரின் பிரேத பரிசோதனை நடவடிக்கைகளும் அதே வைத்தியசாலையில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையில், விபத்து தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த யட்டியாந்தோட்டை பொலிஸார், காரை ஓட்டி வந்த சாரதியைக் கைது செய்துள்ளனர். அவர் தெஹியோவிட்ட, மாகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சாரதி விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மதுபோதையில் அல்லது ஏதேனும் விஷ போதைப்பொருள் பாவித்து வாகனத்தை ஓட்டினாரா என்பதை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவதற்காக அவரை அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் மஹிந்த பத்மசிறி அவர்களின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.