டிக்கோயா இரட்டைக் கொலையாளி காவலில் இருந்து தப்பிச் சென்றார்

dik-oya-double-killer-escapes-from-custody

ஹட்டன், டிக்கோயா பிரதேசத்தில் கணவன்-மனைவி ஜோடி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் இன்று (27) அதிகாலை கண்டி தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். நோய் நிலைமை காரணமாக நேற்று (26) சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 5.45 மணியளவில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.




இவ்வாறு தப்பிச் சென்ற நபர் 37 வயதுடையவர் என்பதுடன், அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் 'செல் ஐயா', 'மனோஜ்' மற்றும் 'மனோகரன்' ஆகிய பெயர்களில் நடமாடியுள்ளார். பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ள இவர், இதற்கு முன்னர் ஹாலிஎல்ல, வட்டவளை, விக்டன், லிந்துலை, பகவந்தலாவ அத்துடன் புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் பிலியந்தலை போன்ற பிரதேசங்களில் நடமாடியுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதற்கு முன்னர் இந்த நபர், ஊடகங்கள் மூலம் வழங்கப்பட்ட விளம்பரத்துடன் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹட்டன் மற்றும் பகவந்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைக்குப் பின்னரே கைது செய்யப்பட்டார். தற்போது தப்பிச் சென்ற இந்த ஆபத்தான சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

dik-oya-double-killer-escapes-from-custody

Post a Comment

Previous Post Next Post