காலி ஹபரடுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள தங்குமிடமொன்றின் மீது மின்னல் தாக்கியதில் கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் மேலும் ஒரு ஊழியர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஹபரடுவ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் இருபத்தாறு வயதுடைய இமாஷா மதுபாஷினி ஹிதவங்ச என்ற யுவதியாவார். இன்று (03) அதிகாலை 12.30 மணியளவில் பிரதேசத்தில் ஏற்பட்ட பலத்த மழையுடன் குறித்த வீட்டிற்கு மின்னல் தாக்கியுள்ளதுடன், அந்த நேரத்தில் இந்த இரண்டு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களும் அங்கு தங்கியிருந்துள்ளனர்.
அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் மின்னல் தாக்கியதில் உள்ளே இருந்த உபகரணங்கள் எரிந்துள்ளன. மின்னல் எவ்வாறு பரவியது என்பது இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தின் பின்னர் உடனடியாக 1990 சுவசாரிய அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் காயமடைந்த இருவரையும் காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு யுவதி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாக கராப்பிட்டிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த மற்றைய ஊழியர் தற்போது அதே வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகிறார்.