
ஏதேனும் ஒரு சொத்து அல்லது வீட்டை வெளிநாட்டவருக்கு வாடகைக்கு வழங்கினால், அது குறித்து உடனடியாக தங்கள் பிரதேசத்தில் உள்ள அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அனைத்து சொத்து உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.
யூ. வுட்லர் அவர்களால் இந்த விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இன்று (05) அரச தகவல் திணைக்கள வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் சுட்டிக்காட்டியதாவது, சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கைக்கு வரும் சில வெளிநாட்டவர்கள் இவ்வாறான வாடகை வீடுகளில் தங்கி பல்வேறு இணையக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடனும், நாட்டில் இடம்பெறும் பாரிய நிதி குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் இந்த புதிய முடிவு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, வெளிநாட்டவர்களுக்கு தங்கள் வீடுகள் அல்லது தங்குமிட வசதிகளை வழங்கும் நபர்கள் எதிர்காலத்தில் இது குறித்து மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.