லுணுகம்வெஹெர, உனாதுவெவ பிரதேசத்தில் 170 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயமடைந்த ஒரு பயங்கரமான வீதி விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று 11 ஆம் திகதி மாலை 5:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த நேரத்தில் அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணித்த 'திலங்க எக்ஸ்பிரஸ்' (NE 5182) என்ற அதிவேக தனியார் பேருந்தும், பதுளையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த 'நிமலி எக்ஸ்பிரஸ்' (SP NC 5122) என்ற தனியார் பேருந்தும் சம்பந்தப்பட்டுள்ளன.
இந்த கடுமையான மோதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக லுணுகம்வெஹெர மற்றும் தெபரவெவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலை வட்டாரங்களின்படி, காயமடைந்தவர்களில் ஒரு வயோதிபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், மற்றவர்களின் உடல்நிலை சாதாரணமாக உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக லுணுகம்வெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.