அரசாங்க கொள்முதல் செயல்முறையை மீறி 165 இலட்சம் ரூபாய் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (10) உத்தரவிட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் தென் மாகாண முதலமைச்சராகப் பணியாற்றியபோது, சரியான கொள்முதல் நடைமுறையிலிருந்து விலகி ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து நாற்காலிகளை வாங்கியது மற்றும் அந்த நாற்காலிகளை தென் மாகாண சபையின் 54 உறுப்பினர்களுக்கு விநியோகித்து அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்தமை தொடர்பாக அவருக்கு எதிராக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரான முன்னாள் முதலமைச்சருக்காக முன்வைக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதவான், இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார். அத்துடன், சந்தேகநபர் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான மருந்து வகைகளை தன்னுடன் வைத்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.