
ஹொரணை, அங்குருவாதொட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த ”செனஹசே கெதெல்ல” என்ற முதியோர் மற்றும் பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பன்னிரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதன் பணிப்பாளரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதன்கிழமை (03) பிற்பகல் ஏற்பட்ட இந்த துயரமான தீ விபத்தில் பதினொரு பேர் சம்பவ இடத்திலேயே தீக்காயமடைந்து உயிரிழந்துள்ளதுடன், பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொருவர் பின்னர் உயிரிழந்துள்ளார். அத்துடன், தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததன் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்த பராமரிப்பு நிலையத்தில் முதியோர்களுடன் மனநலப் பிரச்சினைகள் உள்ள இளைஞர்களும் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பதுடன், உயிரிழந்தவர்களில் 17 வயதுடைய சிறுவன் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முறையான தரநிலைகள் இன்றி மற்றும் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த இந்த நிறுவனத்தின் உரிமையாளரான இசுரு அனுஷ்கா அல்லது லொக்கு அய்யா என்பவர் வியாழக்கிழமை அன்று கைவிலங்குடன் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த இல்லத்தை நடத்துவதற்கு எந்தவொரு உத்தியோகபூர்வ அனுமதியும் பெறப்படவில்லை என்பதும், ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களால் விதிக்கப்பட்ட குறைந்தபட்ச தரநிலைகள் கூட அங்கு பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. அதன்படி, பராமரிப்பு இல்லங்களை நடத்தும் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக இல்லத்தின் உரிமையாளர் நிதி திரட்டும் திட்டமொன்றையும் செயற்படுத்தி வந்துள்ளதாகவும், அதற்காக இல்லத்தில் உள்ளவர்களை சமூக வலைத்தளங்களில் ஒழுக்கமற்ற முறையில் பிரபலப்படுத்தி அதன் மூலம் உதவிகளையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
தீயை அணைப்பதற்காக நிவாரண சேவை குழுக்களும் பிரதேசவாசிகளும் பெரும் முயற்சி மேற்கொண்டதுடன், சட்ட வைத்திய நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். ஆரம்ப சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின்படி, அடுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் கொண்ட களஞ்சிய அறையிலிருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்ட 51 குடியிருப்பாளர்களும் ஊழியர்களும் தற்போது அருகிலுள்ள அரச பாடசாலையொன்றிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஃப்ரெட்ரிக் வூட்லர் தெரிவித்ததுடன், ஹொரணை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.