377 மில்லியன் ரூபாய்கள் அல்லது முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபாய்களுக்கு அதிகமான பெறுமதியுடைய ஹஷீஷ் போதைப்பொருள் தொகுதியை நாட்டிற்கு கொண்டு வந்த வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஆவார்.
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் இவ்வளவு பெரிய பெறுமதியுடைய ஹஷீஷ் போதைப்பொருள் அளவு சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது என பதிவாகியுள்ளது.இந்த சந்தேகத்திற்குரிய மாணவர் போதைப்பொருள் கடத்தலுக்காக விமான நிலையத்தில் சிறப்புப் பயணிகள் பணம் செலுத்தி வசதிகளைப் பெறும் "கோல்ட் ரூட்" (Gold Route) முனையத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 206 அமெரிக்க டாலர்கள் செலுத்தி இந்த சிறப்பு விஐபி முனையம் வழியாக போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த முதல் சந்தர்ப்பம் இது என்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுங்கப் பரிசோதனைகளைத் தவிர்த்து இந்த ஹஷீஷ் போதைப்பொருள் தொகுதியை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதே சந்தேகநபரின் ஆரம்ப திட்டமாக இருந்துள்ளது.
இருப்பினும், அந்த சிறப்பு முனையத்திலிருந்து வரும் பயணிகளின் பயணப் பொதிகளும் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஸ்கேன் இயந்திரங்கள் (Scan Test) மூலம் பரிசோதிக்கப்பட்டன, அப்போது இந்த போதைப்பொருள் தொகுதி கண்டுபிடிக்க முடிந்தது. சந்தேகநபரிடம் இருந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 146 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட 37 கிலோ 639 கிராம் எடையுள்ள ஹஷீஷ் போதைப்பொருள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய ஆரம்ப விசாரணைகளில், அவர் இந்த போதைப்பொருள் தொகுதியை கனடாவிலிருந்து பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட டொமினிக்கன் தேசிய பல்கலைக்கழக மாணவரும், அவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹஷீஷ் போதைப்பொருள் தொகுதியும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.