பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) டைப் 1 நீரிழிவு நோயின் தொடக்கத்தை மூன்று ஆண்டுகள் வரை தாமதப்படுத்தக்கூடிய உலகின் முதல் புதிய சிகிச்சையை தற்போது அங்கீகரித்துள்ளது. 'டெப்லிசுமாப்' (Teplizumab) என அழைக்கப்படும் இந்த மருந்து பிரித்தானியாவின் தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனத்தின் (NICE) ஒப்புதலைப் பெற்றுள்ளதுடன், இது நீரிழிவு சிகிச்சை வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக ஐக்கிய இராச்சியத்தின் நீரிழிவு சங்கம் அறிவித்துள்ளது.
சனோஃபி (Sanofi) நிறுவனத்தால் Tzield என்ற வர்த்தகப் பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, அறிகுறிகள் தோன்றுவதற்கு முன் ஆரம்ப கட்டத்தில் உள்ள எட்டு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்கப்படலாம். ஐக்கிய இராச்சியத்தில் சுமார் 400,000 பேர், நோயெதிர்ப்பு மண்டலத்தால் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் அழிக்கப்படும் இந்த டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்கள் நரம்பு வழியாக வழங்கப்படும் இந்த ஒருமுறை சிகிச்சை மூலம், நோயாளிகள் நீரிழிவைக் கட்டுப்படுத்தி சாதாரணமாக வாழ கூடுதல் நேரம் பெறுவார்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முதல் ஆண்டில் சுமார் 1,100 நோயாளிகள் இந்த சிகிச்சையைப் பெற தகுதி பெறுவார்கள் என்று நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.