4 மாதங்களில் இலஞ்சக் குற்றச்சாட்டில் 41 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்

41-government-officials-arrested-on-bribery-charges-in-4-months

ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய 51 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர், அதாவது 41 பேர் பல்வேறு பதவிகளை வகித்த அரச உத்தியோகத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கதுடன், ஏனையோர் பொதுமக்களாவர்.

இந்தக் குழுவில் 48 பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்தாலும், மேலும் மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தாலும் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.




நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அரச உத்தியோகத்தர்களில் அதிகமானோர் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள். அதன்படி, 14 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் நான்கு உத்தியோகத்தர்களும், நகர அபிவிருத்தி அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலா இரண்டு உத்தியோகத்தர்களும் இந்தக் குழுவில் அடங்குவர். வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றிய இரண்டு வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களில் அடங்குவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் மொத்தமாக 2,686 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வுகளின் பின்னர், 501 முறைப்பாடுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான உத்தரவுகளும் அனுமதியும் கிடைத்துள்ளதாகவும் அந்த அறிக்கைகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post