ரங்கல பிரதேசத்தில் தனது கள்ளக்காதலியைக் கொலை செய்து, சடலத்தை சேற்றுப் பகுதியில் மறைத்துவிட்டு பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று (03) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முப்பது வயதுடைய இந்த நபர், சில நாட்களாக பிரதேசத்திற்கு வெளியே மறைந்திருந்து, மீண்டும் தனது வீட்டிற்கு வந்து தோட்டத்திலிருந்தபோது ரங்கல பொலிஸ் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரைக் கைது செய்தபோது, அவரிடமிருந்து ஏதோ ஒரு அறியப்படாத வாசனை வீசியுள்ளது. அவர் விஷம் அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பொலிஸார் உடனடியாக அவரை சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்தக் கொலை, குறித்த யுவதி காணாமல் போயுள்ளதாக சந்தேகநபர் தானே பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த முறைப்பாட்டின் தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொலிஸார் சந்தேகநபரின் தாயாரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சந்தேகநபர் யுவதியைத் தாக்கி கொலை செய்து, வீட்டின் அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் புதைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ரங்கல பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, குறித்த சதுப்பு நிலத்தை அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். அங்கு, சுமார் மூன்று அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து கொலை செய்யப்பட்ட யுவதியின் சடலத்தை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது. இவ்வாறு உயிரிழந்தவர் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 22 வயதுடைய வாசனா சந்தமாலி வீரசேகர என்ற யுவதியாவார்.
நீதவான் கமல் எஸ். ஜயதிலக்கவின் உத்தரவின் பேரில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளதாவது, திருமணமான இந்த சந்தேகநபர் தனது சட்டபூர்வமான மனைவியை கைவிட்டு, சுமார் நான்கு வருடங்களாக உயிரிழந்த யுவதியுடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.