ஒரே காலகட்டத்தில் இரண்டு அரச நிறுவனங்களில் சட்டவிரோதமாக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்ற நிதி மோசடி தொடர்பில், புதிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சிக் குழுக்களையும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி மீண்டும் ஊடக சந்திப்பொன்றை நடத்தத் தயாராகிக்கொண்டிருந்தபோது, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவரை கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் பின்னர் சந்தேகநபரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேகநபர் 2022 ஆம் ஆண்டில் எந்தவொரு சட்டபூர்வமான அனுமதியுமின்றி ஒரே நேரத்தில் இரண்டு அரச பதவிகளை வகித்து நிதிப் பலன்களைப் பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளது. அவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக இரண்டு ஆண்டுகள், ஏழு மாதங்கள் மற்றும் 25 நாட்கள் பணியாற்றி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக ரூபா 6,051,790 பெற்றுள்ளார். பொதுவாக ஒரு ஜனாதிபதியின் தனிப்பட்ட ஊழியர் நியமனங்கள் அந்த ஜனாதிபதி பதவியில் இருக்கும் காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றாலும், கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய 2022 ஜூலை 14 ஆம் திகதிக்குப் பின்னரும், 2024 பெப்ரவரி 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சந்தேகநபர் ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ரூபா 1,933,065 ஐ சட்டவிரோதமாகத் தொடர்ந்து பெற்றுள்ளார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய உடனேயே, அதாவது 2022 ஜூலை 25 ஆம் திகதி முதல் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட திட்டங்களின் பணிப்பாளர் நாயகமாகவும் சந்தேகநபர் நியமனம் பெற்றுள்ளார். அவர் 2024 செப்டம்பர் 22 ஆம் திகதி வரை அந்தப் பதவியில் கடமையாற்றி மேலும் ரூபா 4,226,884 சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஒரே காலகட்டத்தில் இரட்டைச் சம்பளம் பெற்று நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், இந்த விசேட திட்டப் பிரிவிற்காக தனது நண்பர்கள் உட்பட 137 பேரை நியமித்து, அதற்காக அரச பொது நிதியிலிருந்து ரூபா 176,926,507 என்ற பாரிய தொகையை செலவிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர் அரச சொத்துக்களைப் பாரிய அளவில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் பயன்படுத்திய ஆடி ரக சொகுசு வாகனத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் ரூபா 959,053 அரச நிதி செலவிடப்பட்டுள்ளது. 9 வாகனங்களைக் கொண்ட தனி வாகனக் குழுவை பராமரித்து வாராந்தம் ரூபா 165,000 முதல் 265,000 வரையான பெறுமதியுடைய எரிபொருள் கூப்பன்களைப் பெற்றுள்ளார். அவ்வாறு பெறப்பட்ட ரூபா 86 இலட்சத்திற்கும் அதிகமான எரிபொருள் கூப்பன்கள் அரச கடமைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு எந்தவொரு சான்றிதழோ அல்லது ஆதாரமோ வெளிப்படுத்தப்படவில்லை. அத்துடன், அரச நிறுவனங்களின் ஊழியர்களைத் தமது தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை மற்றும் அரச விடுமுறை அனுமதி அல்லது அறிவித்தல் இன்றி எட்டு சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த காலப்பகுதியிலும் அரசிலிருந்து சம்பளம் பெற்றமை தொடர்பாகவும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் விடயங்களைச் சமர்ப்பித்துள்ளது.
இந்தக் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் என்று சில தரப்பினரால் விமர்சிக்கப்பட்டாலும், சந்தேகநபரின் தகுதியைப் பாராமல் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சட்டத்துறை விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க காலப்பகுதிகளில் இடம்பெற்ற இவ்வாறான அரச நிதி மற்றும் சொத்து துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக கடுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கடந்த காலத்தில் கடுமையாக பகிரங்கமாக விமர்சித்த சுகீஷ்வர பண்டார தொடர்பில் அவரது அரசியல் சகாக்களிடையே சில உள்ளக கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், சுரேஷ் சல்லே மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் குழுவிற்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள், அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு விசாரணைக்கு வரவிருக்கும் திகதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதும், அவரை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் உறுதியான அறிக்கையை வழங்காததும் காரணமாக, எதிர்காலத்தில் அரசியல் அரங்கில் சட்ட நடவடிக்கைகள் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.