குடும்ப தகராறு முற்றி, மனைவி கணவனைக் கொன்றார்

a-family-dispute-went-too-far-and-the-wife-killed-her-husband

ஹொரண, பெல்லபிட்டிய, மாஹேன அரம்பகந்த பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதால், ஒரு பெண் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அரம்பகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஆவார்.




உயிரிழந்தவர் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்திக்கு சம்பந்தப்பட்டவர் என்றும், அவர் அடிக்கடி மதுபோதையில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகளை துன்புறுத்தி தொடர்ந்து தகராறுகளை ஏற்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று (06) இரவு முதல் இந்த தம்பதியினரிடையே வீட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்போது கோபமடைந்த கணவர் கூரிய ஆயுதத்தால் மனைவியை தாக்க முயன்றுள்ளார். அப்போது உடனடியாக செயல்பட்ட மனைவி அந்த ஆயுதத்தைப் பறித்து கணவரை தாக்கி இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் பலத்த காயமடைந்த கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் நீதிவான் பரிசோதனைக்காக சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக சந்தேகநபரான மனைவி ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மிக விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post