
தெல்தெனிய பிரதேசத்தில் காரில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் சிறு குழந்தை யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உயிரிழந்த பெண்ணின் காதலன் என்பதை பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த சந்தேகநபர் குறித்த யுவதியிடம் தினேத் திஸாநாயக்க என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போதிலும், தேசிய அடையாள அட்டையில் அவரது உண்மையான பெயர் ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக்க ஸ்ரீயான் ஜயசுந்தர என்றும், அவர் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் செயற்பட்ட யாழ்ப்பாணம் கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் மூலம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்கள் இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) இவர்கள் வெள்ளவத்தையில் இருந்து இந்த பேருந்தில் ஏறியுள்ளதாகவும், கைது செய்யப்படும் போது பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக பிரதான சந்தேகநபர் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவரது மனைவி முஸ்லிம் பெண்ணாக வேடமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைகளின் போது சந்தேகநபர், தான் வவுனியாவில் இருந்து குருநாகல் பகுதிக்கு வந்து அங்குள்ள தனது மற்ற இரண்டு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பின்னர் பொலிஸில் சரணடையத் தயாராக இருந்ததாகக் கூறியுள்ளார். எவ்வாறாயினும், கடந்த சில நாட்களாக இவர்கள் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் மறைந்திருந்து கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து தப்பிச் செல்லவும் முயற்சித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஒலுகலவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த வெற்றிகரமான சுற்றிவளைப்பிற்குப் பின்னர், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் காரில் இருந்து மீட்கப்பட்ட சடலம், அம்பாறை பொது வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்ட்டாக கடமையாற்றிய வெலிகமவைச் சேர்ந்த 34-35 வயதுடைய ஷம்யா தர்ஷினி என்ற பெண்ணினுடையது என முன்னர் அடையாளம் காணப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்ட பின்னர் சடலத்தை காரில் போட்டுவிட்டு பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற அவரது காதலன் கன்னோருவ பிரதேசத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஆவார்.
இந்த மர்மக் கொலையின் பின்னணியை வெளிக்கொணர வழிவகுத்தது கோட்டவெவ, தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நுவரெலியா பொலிஸில் செய்த முறைப்பாடு ஆகும். நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது சகோதரி பல நாட்களாக உணவருந்தாததால், அது குறித்து விசாரிக்க உதவுமாறு அவர் கடந்த 17ஆம் திகதி காலை பொலிஸாரிடம் கோரினார். அதன்படி நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் குழு அந்த அடுக்குமாடி குடியிருப்பைப் பரிசோதித்தபோது அங்கு எவரும் இருக்கவில்லை. பின்னர் அங்கு நிறுவப்பட்ட பாதுகாப்பு கமரா (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தபோது, கடந்த 16ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் இந்த சந்தேகநபர் பொறியியலாளர் அந்த வீட்டிற்கு வரும் விதமும், அங்கு சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்து இரவு 10.30 மணியளவில் மயக்கமடைந்திருந்த யுவதியை தூக்கிக்கொண்டு சென்று மோட்டார் காரில் ஏற்றிச் செல்லும் விதமும் தெளிவாகப் பதிவாகியிருந்தது.