தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவியான ஷியாமிலா பெரேரா அம்மையார், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்ல, பெலவத்த பிரதேசத்தில் வசிக்கும் அவர், இன்று (30) பிற்பகல் 1.30 மணியளவில் ஆணைக்குழு வளாகத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் தலைவியாக கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி செயல் தொடர்பில் அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாகவும், அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வெற்றிடங்கள் இல்லாமலும், இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு முகாமைத்துவ உதவியாளர் ஒப்பந்த அடிப்படையில் நிறுவனத்தில் நியமிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவ்வாறு நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரிகளும் தேசிய லொத்தர் சபையின் எந்தவொரு சேவைக்கும் பயன்படுத்தப்படவில்லை, அவர்கள் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவின் அலுவலக ஊழியர்களின் சேவைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும், அந்த நபர்கள் சபைக்கு எந்த சேவையையும் செய்யாத போதிலும், அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை தேசிய லொத்தர் சபை மூலம் செலுத்த ஏற்பாடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதன்படி அவர் ஊழல் என்ற குற்றத்தைச் செய்துள்ளார் என்றும் ஆணைக்குழு குறிப்பிடுகிறது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.