ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகுமா? மனு விசாரணைக்கு.

will-ananda-wijepala-lose-his-position-as-a-member-of-parliament-petition-for-hearing

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா இந்த மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரிய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.




ஜனக் சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த விசேட மேன்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டது. ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் போது ஜனாதிபதி பணிக்குழாம் தலைவராகச் செயற்படுவது அரசியலமைப்பு விதிகளை மீறுவதாகும் என மனுதாரர் சுட்டிக்காட்டினார். பொதுப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட சிலர் இதில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விஸ்வ விமுக்தி, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் போது ஜனாதிபதி பணிக்குழாம் தலைவராகச் செயற்படுவது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்பதால் அந்த நியமனம் முற்றிலும் சட்டவிரோதமானது என்று தெரிவித்தார். எனவே, அமைச்சரை உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதிட்டார்.




இதற்குப் பதிலளித்த சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ராஜீவ் பெரேரா, இந்த விடயம் தொடர்பாக முதலில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அந்த நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார். ஜனாதிபதியால் செய்யப்பட்ட நியமனத்தை சவால் செய்ய முடியாது, அத்தியாவசிய தரப்பினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்படவில்லை மற்றும் காலதாமதம் ஆகிய அடிப்படை ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்திருந்தது. மேலும், பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் இந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்றும், அதற்குப் பின்னரே நியமிக்கப்பட்டதால் எந்தவொரு அரசியலமைப்பு விதியும் மீறப்படவில்லை என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் குறிப்பிட்டார்.

இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனமாகப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இறுதியாக இந்த விசேட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதி வழங்கியது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி விஸ்வ விமுக்தி ஆஜரானார், அமைச்சர் ஆனந்த விஜேபால சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம் ஆஜரானார், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ராஜீவ் பெரேரா ஆஜரானார்.

Post a Comment

Previous Post Next Post