பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கம்பொல விதானகே சமந்த குமார என்ற "வெலே சுதா" தாக்கல் செய்திருந்த விசேட மேன்முறையீட்டு அனுமதி மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவருக்கு முன்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்ந்து மாற்றமின்றி அமுல்படுத்தப்படும்.
மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபேசேகர மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், கீழ் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யக் கோரிய இந்த அனுமதியை நிராகரித்தது. இந்த மனு நிராகரிக்கப்பட்டதன் மூலம், சமந்த குமாருக்கு எதிராக விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பு மற்றும் மரண தண்டனை பாதுகாப்பாக உள்ளது.
2008 ஆம் ஆண்டு கல்கிசை பிரதேசத்தில் 7.05 கிராம் ஹெரோயின் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டதன் காரணமாக, 2015 அக்டோபர் 14 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வெலே சுதாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குறித்த மேல் நீதிமன்றத் தீர்ப்பு, அப்போதைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய தற்போதைய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன அவர்களால் அறிவிக்கப்பட்டது.
பின்னர், 2019 ஏப்ரல் 5 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றமும் மேல் நீதிமன்றத்தின் அத்தீர்ப்பை உறுதிப்படுத்தி, குறித்த மரண தண்டனையை உறுதிப்படுத்தியது. தனது மனுவின் மூலம் மனுதாரர், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புகள் சட்டபூர்வமற்றவை என்று சவால் விட எதிர்பார்த்திருந்தார்.
உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த மனு விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன ஆஜரானார். சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி லக்மாலி கருணாரத்ன நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.