
களுத்துறை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்காக கொண்டுவரப்பட்ட சோற்றுப் பொதியில் இருந்த கோழி இறைச்சி கறிக்குள் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகுதியை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சட்டவிரோதப் பொருட்களைக் கொண்டு வந்த நபர் நேற்று முன்தினம் சிறைச்சாலை அதிகாரிகளின் சந்தேகத்திற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு, சம்பந்தப்பட்ட இறைச்சி கறிக்குள் 1000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 4800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக களுத்துறை சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முன்னதாக ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தற்போது விளக்கமறியலில் உள்ள கைதி ஒருவருக்கு வழங்குவதற்காகவே இந்த போதைப்பொருள் தொகுதியை கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்ததாக சிறைச்சாலை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த போதைப்பொருளை சிறைச்சாலைக்குள் விற்பனை செய்யும் நோக்குடன் கைதியிடம் ஒப்படைக்க சந்தேகநபர் முயற்சித்திருக்கலாம் என சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் மற்றும் சிறைச்சாலையில் உள்ள கைதி குறித்தும் சிறைச்சாலை அதிகாரிகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.