2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பில், பேர்ச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்து கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட உத்தரவை செல்லுபடியற்றதாக்கிய உச்ச நீதிமன்றம், அந்த வழக்கை தாமதமின்றி மீண்டும் ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை, ஒரு சிறப்பு நிலைமை எழாவிட்டால், தினசரி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மேல் நீதிமன்றத்திற்கு மேலும் அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகத்தின் போது, அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தி நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பேர்ச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், அர்ஜுன் மகேந்திரன், ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன, ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட பத்து பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இவ்வாறு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஒரு ஆரம்ப ஆட்சேபனை மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பேர்ச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் ஒரு இயற்கை நபர் அல்ல என்பதால், அதற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என்ற பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, பிரதான நிறுவனத்திற்கும் அத்துடன் அதற்கு உதவிய மற்ற பிரதிவாதிகளுக்கும் எதிராக வழக்கை தொடர முடியாது என தீர்மானித்து, அவர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.
மேல் நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை சவால் செய்து சட்டமா அதிபர் முதலில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தார். அந்த மேன்முறையீட்டை பரிசீலித்த ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம், ஒரு நிறுவனம் ஒரு நிறுவனக் கட்டமைப்பு என்றாலும், விளக்கச் சட்டத்தின் கீழ் அது ஒரு நபராகக் கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதன்படி, குற்றவியல் சட்டக் கோவையின் 386 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய பொதுச் சொத்துச் சட்டத்தின் 5(1) ஆம் பிரிவின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்வதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று நீதிபதி மஹிந்த சமயவர்தன தனது தீர்ப்பை அறிவிக்கும் போது வலியுறுத்தினார்.
இயற்கை நபர்கள் மூலமாக மட்டுமல்லாமல், நிறுவனக் கட்டமைப்புகளுக்குப் பின்னால் உள்ள நபர்கள் மூலமாகவும் இத்தகைய இரகசியமான மற்றும் சிக்கலான நிதி மோசடிகள் நடைபெறுகின்றன என்றும், இதனால் பொதுச் சொத்துக்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகின்றது என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்திற்கு சிறைத்தண்டனை விதிக்க முடியாது என்றாலும், குற்றவாளிகளாகக் கண்டறியப்படும் பட்சத்தில் சட்ட ஏற்பாடுகள் மூலம் அபராதம் விதிப்பதன் மூலம் தண்டனை வழங்க முடியும் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு விசாரணையின் போது சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார ஆஜரானார். பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைஸ் முஸ்தபா, பைசா மாக்கர், நவீன் மாரப்பன மற்றும் ஷவிந்திர பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழு வாதங்களை முன்வைத்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 450(5)(அ) பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட வழக்கை விரைவுபடுத்துவதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.