ஹொரணை, இலிம்ப பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல சர்வதேச முன்பள்ளியில் மாணவர்களின் தங்கப் பஞ்சாயுதங்களை அவ்வப்போது திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய அதே பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை இந்த மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பிரதான நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கிரிஹல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஆவார்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில், முன்பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய தமது பிள்ளைகளின் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பஞ்சாயுதங்கள் காணாமல் போயுள்ளதாக ஐந்து பெற்றோர்கள் ஹொரணைப் பொலிஸில் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட முன்பள்ளி வளாகத்தில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு சந்தேகநபரான பாதுகாப்பு அதிகாரி தங்கியிருந்த பாதுகாப்பு அறை சோதனையிடப்பட்டதுடன், அங்கு அவர் பயன்படுத்திய கூடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காணாமல் போன இரண்டு பஞ்சாயுதங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, அவரே அவ்வப்போது குழந்தைகளின் கழுத்தில் இருந்து இந்த பஞ்சாயுதங்களை கழற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், திருடப்பட்ட பஞ்சாயுதங்களில் ஐந்து வெவ்வேறு அடகு நிலையங்களில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த ஹொரணை பொலிஸ் பரிசோதகர் தரங்க விக்ரமாராச்சி, சிறு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கடமைப்பட்ட பாதுகாப்பு அதிகாரியே இவ்வாறான செயலை செய்திருப்பது பாரதூரமான நிலைமை என்றும், இதனால் குழந்தைகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறித்து அச்சமும் பிரச்சினையும் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.