சலே பற்றி அமைச்சர் விஜேபால இன்று பாராளுமன்றத்தில் செய்த விசேட வெளிப்படுத்தல் Full Text

minister-wijepalas-revelation-about-sale-in-parliament-today-full-text

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களினால் இன்று பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றின் மூலம், தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வரும் பல தவறான செய்திகளின் உண்மைத் தன்மை தெளிவுபடுத்தப்பட்டதுடன், விசாரணைகளின் முன்னேற்றத்திற்கு அமைவாக கண்டறியப்பட்ட பல விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டன. அவரது முழுமையான உரையின் எழுத்துப்பூர்வமான அறிக்கை பின்வருமாறு:

"சில தரப்பினரால் தற்போது பல்வேறு அடிப்படையற்ற மற்றும் அப்பட்டமான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திரு. சுரேஷ் சலே அவர்கள் கைது செய்யப்பட்டமை, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் அவருக்கு பல்வேறு வடிவங்களில் சித்திரவதைகள் செய்யப்படுவதாகக் கூறப்படும் போலியான மற்றும் தவறான கூற்றுகளின் ஊடாக சமூகத்தை தவறாக வழிநடத்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து இந்த கௌரவ சபைக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் கருதினேன்.

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, சுற்றுலா விடுதிகள் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களை இலக்கு வைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி (உயிர்த்த ஞாயிறு அன்று) நடத்தப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய மற்றும் பின்னைய நிகழ்வுகள் குறித்து இந்த சந்தர்ப்பத்தில் உங்களது அவதானத்தைச் செலுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இதுவரை வெளிவராத உண்மைகளையும், அந்த குற்றங்களுக்குப் பொறுப்பான நபர்கள், குழுக்கள் மற்றும் தரப்பினரைக் கண்டறிவதற்கும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
1. விசாரணைகளை ஆரம்பித்தலும் சட்டரீதியான நடவடிக்கைகளும்

சமூக மற்றும் சமய மையத்தின் (CSR) நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் வர்ணன் சில்வா அவர்களினால் 2024.10.01 ஆம் திகதியிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக, 544/2024 (CM) எனும் விசாரணைக்கோப்பு இலக்கத்தின் கீழ் பல கோணங்களில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

    சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளல்: விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லும்போது ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கள் தொடர்பாக ஆரம்பக் கட்டத்திலேயே CR 1/316/2024 இன் கீழ் கௌரவ சட்டமா அதிபருக்கு விடயங்களை தெளிவுபடுத்தி, சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்ற நடைமுறை: இந்த விசாரணைக்கு அமைவாக B 882/2024 எனும் வழக்கு இலக்கத்தின் கீழ் கௌரவ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்கள் அறிக்கை செய்யப்பட்டு, வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    சட்ட வழிகாட்டல்: முறைப்பாட்டின் சார்பில் விடயங்களை முன்வைப்பதற்கும் விசாரணைகளுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கும் சட்டமா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ள சட்ட அதிகாரிகளிடமிருந்து தொடர்ச்சியாக சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

2. திரு. துவான் சுரேஷ் சலேவுக்கு எதிராக வெளிப்பட்டுள்ள விடயங்கள்

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணிப்பாளரும், அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே எனப்படும் நபர், இஸ்லாமிய தீவிரவாதிகளை தந்திரோபாயமாக வழிநடத்தி இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டினார் என நியாயமாக நம்புவதற்குப் போதுமான பின்வரும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன:

    உணர்திறன்மிக்க தகவல்களை சேகரித்தல்: உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர், நான்கு முஸ்லிம் நபர்களை வழிநடத்தி, நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட உணர்திறன்மிக்க தகவல்களைச் சேகரிப்பதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    சந்தேகநபர்களை அடையாளம் காணல்: இந்தத் தகவல்களைச் சேகரிப்பதற்காக வழிநடத்தப்பட்ட நபர்களில் பிரதானியாக இருந்தவரின் புகைப்படத்தை, சாட்சியாளர் ஒருவர் குற்றப் பதிவுப் பிரிவில் (CRD) உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகைப்படங்களுக்கு இடையில் இருந்து அடையாளம் கண்டுள்ளார். அந்த நபர் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) கருத்தியலைக் கொண்டவர் என்பதும், தாக்குதலின் பின்னர் இதுவரையில் காணாமல் போயுள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புலனாய்வுத் தகவல்களைப் புறக்கணித்தல்: சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பினால் தாக்குதலொன்றை நடத்துவதற்கான திட்டமொன்று இருப்பதாக, பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் இராணுவ புலனாய்வுத் தகவல் வழங்குநர் ஒருவரால் அறிவூட்டப்பட்டிருந்த போதிலும், அதனைப் புறக்கணித்ததன் மூலம் தாக்குதலுக்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

    தகவல் வழங்குநருக்கு அழுத்தம் கொடுத்தல்: இந்தத் தாக்குதலானது இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவரின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்டது என அந்தத் தகவல் வழங்குநர் அறிவித்ததன் பின்னர், அவர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர், திரு. சுரேஷ் சலே அவர்கள் கொழும்பு கலாதாரி ஹோட்டலில் அவரைச் சந்தித்து மன்னிப்புக் கோரினார் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    செனல் 4 (Channel 4) வெளிப்படுத்தல்: முகமது நிலாம் முகமது ஹன்ஸீர் எனப்படும் 'அசாத் மௌலானா' என்பவரால் பிரித்தானியாவின் செனல் 4 ஊடகத்திற்கு வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின்படி, இந்தத் தொடர் தாக்குதல்களுக்குத் தேவையான பின்னணி திட்டமிட்ட முறையில் துவான் சுரேஷ் சலேயினால் தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயற்பாட்டின் ஊடாக தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான சகவாழ்வுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) உரிய பிரிவுகளின் கீழ் வரும் குற்றங்களைப்புரிந்து, இக்குற்றத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதவளித்து ஒத்தாசை புரிந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
3. சந்தேகநபர் கைது செய்யப்பட்டமையும் வழங்கப்பட்டுள்ள வசதிகளும்

மேற்குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் தெளிவுபடுத்தப்பட்டு, தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைவாக (குறிப்பிடப்பட்டுள்ளவாறு: இலக்கம் 7/2B, 7 வது குறுகிய தெரு, ஜம்புகஸ்முல்ல வீதி, நுகேகொட எனும் முகவரியில் வசிக்கும்) திரு. துவான் சுரேஷ் சலே அவர்கள் 2026.02.25 ஆம் திகதி பேலியகொட பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து அவரது அனைத்து அடிப்படை உரிமைகளும் வசதிகளும் எவ்விதத்திலும் மீறப்படாமல் வழங்கப்பட்டுள்ளன:

    வழக்கறிஞர் ஒருவருடன் தொடர்புகொள்வதற்கும் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மனைவி உள்ளிட்ட உறவினர்களுக்கு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, அதற்குரிய ஏற்புரிமைப் பற்றுச்சீட்டு (acknowledgment receipt) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு (HRCSL) எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு நீதிமன்ற மருத்துவ அதிகாரி (JMO) முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியால தடுப்புக் காவலுக்கான உத்தரவும், அதனைத் தொடர்ந்து 90 நாட்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவும் பெற்றுக்கொள்ளப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாராந்தம் வழங்கப்படும் வசதிகள்:

    ஒவ்வொரு புதன்கிழமையும்: வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்: மனைவி மற்றும் தாய் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு.

    ஒவ்வொரு சனிக்கிழமையும்: நெருங்கிய உறவினர்களைச் சந்திப்பதற்கும், வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவு, உடைகள் மற்றும் ஏனைய பானங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கௌரவ கோட்டை நீதவான் அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து தடுப்புக் காவல் அறையை நேரில் பார்வையிட்டுள்ளார். அந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்கு அநாகரீகமான முறையில் நடத்தப்பட்டதாகவோ அல்லது சித்திரவதைகள் செய்யப்பட்டதாகவோ சந்தேகநபர் நீதவானிடமோ அல்லது வேறு எந்தவொரு அதிகாரியிடமோ முறைப்பாடு செய்யவில்லை.
4. மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படல்

சந்தேகநபரின் வழக்கறிஞரின் கோரிக்கைக்கு இணங்க, கௌரவ நீதிமன்றத்தின் உத்தரவின்படி கொழும்பு பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரி திரு. ஸ்ரியந்த அமரரத்ன அவர்களிடம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பரிந்துரைகளின் அடிப்படையில் சந்தேகநபருக்குத் தேவையான அனைத்து விசேட மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன:
திகதி    வைத்தியசாலை / நிறுவனம்    விசேட வைத்தியர்    வழங்கப்பட்ட சிகிச்சை / பரிசோதனை
2026.04.29    கொழும்பு தேசிய வைத்தியசாலை    தோல் நோய் விசேட வைத்தியர் ஜானக அகரவிற்ற    தொடைப் பகுதியில் ஏற்பட்ட தடிப்பு (சரும நோய்) நிலைமைக்காக மருந்துகள் வழங்கப்படல்.
2026.04.29    கொழும்பு தேசிய வைத்தியசாலை    ஊட்டச்சத்து விசேட வைத்தியர் எச்.எம்.என்.பி. ஹேரத்    ஊட்டச்சத்து கூடுதல் உணவுகள் மற்றும் வைட்டமின்கள் வழங்கப்படல் (தற்போது பயன்படுத்தி வருகிறார்).
2026.04.29 / 2026.05.02    கொழும்பு தேசிய வைத்தியசாலை    நரம்பியல் விசேட வைத்தியர் காமினி பத்திரண    பரிசோதனை மற்றும் MRI பரிசோதனை மேற்கொண்டு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளல்.
2026.05.25 / 26    தேசிய கண் வைத்தியசாலை    விசேட கண் வைத்தியர் கே.ஆர். தயாவங்ச    கண் பரிசோதனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள்.
கைது செய்யப்பட்ட தினம்    கொழும்பு தேசிய வைத்தியசாலை    உரிய விசேட வைத்தியர்கள்    காது குறைபாட்டிற்கான சிகிச்சை மற்றும் கழன்றிருந்த செயற்கைப் பல்லை பல் மருத்துவர்கள் மூலம் முறையாகப் பொருத்துதல்.

இவற்றுக்கு மேலதிகமாக, ஆய்வகப் பரிசோதனைகளுக்கான மாதிரிகள், கொழும்பு 8, டேனிஸ்டர் டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (MRI) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
5. திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தடையும் சந்தேகநபரின் உண்ணாவிரதமும்

அசாத் மௌலானா எனப்படும் சாட்சியாளரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வெளிவந்த உணர்திறன்மிக்க விடயங்களை முன்னிறுத்தி, முன்னாள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட மூன்று நபர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையைப் பெற்றுக்கொள்வதற்கு 2026.03.26 அன்று கௌரவ கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து உத்தரவொன்று பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், திரு. சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் உத்தரவை 2026.05.27 ஆம் திகதி முதல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சட்டரீதியான நடவடிக்கைகளின் பின்னர், சுரேஷ் சலே என்ற சந்தேகநபரின் நடத்தை முற்றிலும் மாற்றமடைந்தது. விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும், பாரபட்சமான முறையிலும் நடந்துகொண்ட அவர், 2026.06.05 ஆம் திகதி இரவு முதல் உணவைத் தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

    2026.06.06 அன்று: அவரது சகோதரர் மற்றும் மகனால் கொண்டு வரப்பட்ட உணவைக் கூட அவர் நிராகரித்தார். மனைவியின் கோரிக்கைக்கு இணங்க குடும்பத்தினருடன் கலந்துரையாடுவதற்கு இடமளிக்கப்பட்ட போதிலும், அவர் தொடர்ந்து உணவை உட்கொள்ள மறுத்துவிட்டார்.

    மருத்துவக் கண்காணிப்பு: இவ்வாறு திட்டமிட்ட முறையில் உணவை நிராகரித்ததன் காரணமாக, பொலிஸ் வைத்தியசாலையின் மருத்துவப் பணிப்பாளர் தினுக செனவிரத்ன மற்றும் வைத்தியர் சஞ்சீவ நுவன் ஆகியோர் அழைக்கப்பட்டு அவரது சுகாதார நிலைமை பரிசோதிக்கப்பட்டது.

    வைத்தியசாலையில் அனுமதித்தல்: 2026.06.07 அன்று மீண்டும் வைத்தியர் சேனாரத்ன அவர்கள் அழைக்கப்பட்டு பரிசோதித்தபோது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக முழுமையான பாதுகாப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப சிகிச்சைகளின் பின்னர் 14 வது வார்டுக்கும், 2026.06.08 ஆம் திகதி முதல் இதுவரையில் 42 வது வார்டுக்கும் மாற்றப்பட்டு மனநல மருத்துவர்கள், உடலியல் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் முழுமையான கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.

6. எதிர்கால விசாரணை நடவடிக்கைகளும் நீதியை நிலைநாட்டலும்

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, கைது செய்யப்பட்ட நாள் முதல் இதுவரையில் சந்தேகநபர் விசாரணை நடவடிக்கைகளுக்கு எவ்வித நேர்மறையான ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. அவரது வசம் இருந்து கைப்பற்றப்பட்ட Apple ரக அலைபேசி மற்றும் அவரது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மடிக்கணினி (Laptop) ஆகியவற்றின் கடவுச்சொற்களைக் (Passwords) கூட விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு அவர் இதுவரை மறுத்து வருகிறார்.

அவர் எவ்வாறான முறையில் விடயங்களை மறைக்க முயன்றபோதிலும், தற்போது கிடைத்துள்ள அனைத்து அறிவியல், தொழில்நுட்ப மற்றும் தொலைபேசி தரவுகளின் ஊடாக இந்தச் சதித்திட்டத்துடன் அவருக்கு இருக்கும் நேரடித் தொடர்பு மிகச்ன்றாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு உண்ணாவிரதப் போராட்டத்திற்கோ அல்லது சத்தியாக்கிரகத்திற்கோ பணிந்து இந்த விசாரணைகளை நிறுத்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 278 அப்பாவி உயிர்கள் பலியாகின; 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஊனமுற்ற நிலைக்கு ஆளாகினர். அந்த மக்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும். சமூகத்தில் நிலவிய கடுமையான சந்தேகங்களை நீக்கி, உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வருவதே எமது நோக்கமாகும்.

இந்த விசாரணையின் சிக்கல்தன்மை, சர்ச்சைக்குரிய தன்மை மற்றும் உணர்திறன் காரணமாக அனைத்து விடயங்களையும் இந்த சந்தர்ப்பத்தில் என்னால் வெளிப்படுத்த முடியாது. எவ்வாறாயினும், விசாரணை நடவடிக்கைகள் மேலும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட்டு, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க நாம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்பதை இந்த கௌரவ சபைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்."

Post a Comment

Previous Post Next Post