தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) பில்லியன் கணக்கான ரூபாய்கள் நிதி மோசடியை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் வங்கித் துறையின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தும் செயல்முறையை மேலும் கடுமையாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் தொடர்பான ஊழியர் அறிக்கையின் மூலம் மத்திய வங்கியின் இந்த ஒழுங்குபடுத்தும் பொறுப்பை விரைவாக வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பாரதூரமான நிதி முறைகேடு குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்க நிதி தொடர்பான குழு (CoPF) மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் ஒரு விசேட சந்திப்பு நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களும் கலந்துகொண்டார். இந்த மோசடி இடம்பெற்றதற்கான அடிப்படைக் காரணங்கள் மற்றும் அது எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதைக் கண்டறிய ஏற்கனவே ஒரு தடயவியல் தணிக்கை (forensic audit) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
இலங்கை மத்திய வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்த தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஒரு நிறுவனமே இந்த விசாரணையின் நோக்கம் (scope) தீர்மானிப்பதில் ஈடுபடுத்தப்படுவது குறித்து கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் குழு உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய வங்கி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து நோக்கம் தொடர்பான ஒரு வரைவுத் திட்டம் மட்டுமே பெறப்பட்டது என்றும், மத்திய வங்கியின் நேரடி தலையீட்டுடன் அது முறையாக தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தனர். பத்து வருட காலப்பகுதியில் நடந்த பரிவர்த்தனைகளை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த விரிவான விசாரணையின் இடைக்கால அறிக்கை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன், அதன் இறுதி அறிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.
முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, இந்த நுட்பமான மோசடி செயல்முறை மூலம் சுமார் 13 பில்லியன் ரூபாய்கள் வங்கி அமைப்பிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், இந்த மோசடி மூலம் அபகரிக்கப்பட்ட பணம் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஒரு விசேட தகவலை வெளியிட்டார்.