
நேற்று (31) இரவு ஹைலெவல் வீதியில் மீகொட சந்திக்கு அருகில் நடைபெற்ற ரொட்டி தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கார் மோதியதில் ஏற்பட்ட மிகவும் சோகமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அவிசாவெல்லையில் இருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த இந்த கார் மக்கள் கூட்டத்திற்குள் மோதிய பின்னர் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த பதின்மூன்று பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவர்களில் ஆறு பேர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர்களில் 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 முதல் 38 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் அடங்குவர். உயிரிழந்த பெண்கள் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆண்கள் ஹங்வெல்ல, பாதுக்க மற்றும் அவிசாவெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மற்றும் கணவரின் தாயார், அத்துடன் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,
இந்த விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவன் உட்பட மேலும் ஏழு பேர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தங்கி மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற கார் மற்றும் அதன் சாரதியைக் கைது செய்ய பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள், சந்தேகநபரான சாரதியை கோடகம் சந்திப் பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் கைது செய்ய முடிந்தது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என்றும், விபத்து நடந்த நேரத்தில் அவர் அதிக மது அருந்தியிருந்ததாகவும் பொலிஸார் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.