உள்நாட்டில் நிலவும் அதிக இயக்கச் செலவுகள் மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் (LPBOA) இணக்கம் தெரிவித்துள்ளன. இதன்படி, தற்போதுள்ள குறைந்தபட்ச பஸ் கட்டணமான 30 ரூபா, 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 34 ரூபாவாக உயரும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், 100 கிலோமீற்றர் வரையிலான குறுகிய மற்றும் நடுத்தர தூர பயணங்களுக்கான சாதாரண பஸ் கட்டணங்களை 12 சதவீதத்தாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட நீண்ட தூர பயணங்களுக்கான கட்டணங்களை 20 சதவீதத்தாலும் அதிகரிக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.சாதாரண பஸ் சேவைகளுக்கு மேலதிகமாக, சொகுசு போக்குவரத்து சேவைகளுக்கும் இந்த கட்டண திருத்தம் அமுலாகும். இதன்படி, 100 கிலோமீற்றருக்கும் குறைவான தூரம் பயணிக்கும் சொகுசு பஸ்களுக்கான கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், 100 கிலோமீற்றர் எல்லையைத் தாண்டிச் செல்லும் சொகுசு பஸ் சேவைகளுக்கான கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பஸ் சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
வருடாந்த பஸ் கட்டணக் கொள்கைக்கு அமைய, 2026 ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பஸ் கட்டணத் திருத்தத்திற்கு அமைச்சரவையின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக எரிபொருள் விலை அதிகரிப்பு, அதிகரித்து வரும் இயக்கச் செலவுகள், பஸ் உதிரிப்பாகங்களின் விலையை நேரடியாகப் பாதிக்கும் அமெரிக்க டொலரின் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள், அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் பஸ் சேவைகள் மற்றும் இலங்கை மெட்ரோ ட்ரான்சிட் தனியார் நிறுவனத்தின் கீழ் பஸ் சேவைகளை இணைத்தல் போன்ற காரணிகள் இந்த கட்டணத் திருத்தத்திற்கு முக்கியமாகப் பங்களித்துள்ளன.
பயணிகளுக்காக பொதுப் போக்குவரத்து சேவைகளைத் தொடர்ச்சியாக உறுதி செய்வதற்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பஸ் தொழிலைப் பாதுகாப்பதற்கும், தற்போதுள்ள பஸ் கட்டண சூத்திரத்தை மீளாய்வு செய்து புதுப்பிப்பதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒரு விசேட குழுவை நியமித்தது. அதன்படி, கடந்த ஜூன் 30 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட எரிபொருள் விலை திருத்தங்களையும் உள்ளடக்கி, அக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர், அதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தது.