
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேலாகியும் விடுவிக்கப்படாத 1,025 வாகனங்கள் அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களில் 625 வாகனங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களை விடுவிப்பது தொடர்பாக அண்மைய நாட்களில் ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் குறித்து விளக்கமளித்த அவர், இந்த வாகனங்கள் எதுவும் சுங்கத் திணைக்களத்தின் தாமதம் அல்லது தவறு காரணமாக நிறுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் சந்தையில் வாகனங்களுக்கான தேவை குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் இறக்குமதியாளர்களே இந்த வாகனங்களை விடுவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109வது பிரிவின்படி, ஒரு வாகனம் தொடர்பாக எந்தவொரு சுங்கக் குற்றமும் இடம்பெறாவிட்டாலும், சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் உரிய சுங்க வரிகள் மற்றும் பிற வரிகளை செலுத்தி ஒரு மாதத்திற்குள் வாகனங்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்கவில்லை என்றால், அந்த வாகனங்களை டெண்டர் அல்லது பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்ய சுங்கத் திணைக்களத்திற்கு அதிகாரம் உண்டு.
அவ்வாறு ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அரசுக்குச் சேர வேண்டிய வரிப் பணம், துறைமுகக் கட்டணங்கள் மற்றும் கிடங்குக் கட்டணங்கள் அறவிடப்படும். ஏதேனும் பணம் மீதமிருந்தால், அதை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கவும் வாய்ப்புள்ளது. மூன்று மாதங்களுக்கு மேலான வாகனங்கள் குறித்து அம்பாந்தோட்டை துறைமுகம் அறிவித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், நியாயமான காரணத்தைக் கூறி ஏதேனும் இறக்குமதியாளர் கோரிக்கை விடுத்தால், அந்த வாகனங்களை விடுவிப்பதற்கு மேலும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணய நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள இத்தகைய சூழ்நிலையில், வெளிநாட்டு நாணயத்தைச் செலவழித்து வாகனங்களை நாட்டிற்கு கொண்டுவந்து இவ்வாறு துறைமுகத்திலிருந்து விடுவிக்காமல் இருப்பது ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவாக்குகிறது என்று சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.