இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை 'ஓரிகிட்ஸ்' விண்கல் மழை தீவிரமாக இருக்கும் என நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் மழையின் அதிகபட்ச செயல்பாடு ஆகஸ்ட் 31 ஆம் திகதி இரவுக்கும் செப்டம்பர் 01 ஆம் திகதி அதிகாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இது ஒரு சிறிய விண்கல் மழை என்று கூறும் ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் வானியல் ஆராய்ச்சியாளர் சாரித் தனஞ்சய மாரசிங்க, ஆகஸ்ட் 31 ஆம் திகதி மாலை 7.00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 3.00 - 4.00 மணி வரை வடகிழக்கு திசையில் இருந்து இதைப் பார்க்க முடியும் என்று குறிப்பிட்டார். இருப்பினும், வானில் உள்ள ஒளியின் நிலை மற்றும் வானிலை மாற்றங்களைப் பொறுத்து, பல்வேறு பகுதிகளில் இது தோன்றும் விதம் மாறுபடலாம்.
பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு 100 முதல் 150 விண்கற்கள் வரை அதிக எண்ணிக்கையில் காணப்பட்டால் அது ஒரு பெரிய விண்கல் மழை என்று கருதப்படும், ஆனால் ஓரிகிட்ஸ் விண்கல் மழையின் போது ஒரு மணி நேரத்திற்கு 10 முதல் 15 விண்கற்கள் மட்டுமே காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த விண்கல் மழை ஒப்பீட்டளவில் பலவீனமானது என்றாலும், பூமி அடர்த்தியான தூசி அடுக்குகளின் வழியாகச் செல்லும் போது குறுகிய கால விண்கல் வெடிப்புகள் ஏற்படுகின்றன. முதன்முதலில் 1935 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட இந்த விண்கல் மழையில், 1935, 1986, 1994, 2007 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அத்தகைய குறிப்பிடத்தக்க வெடிப்புகள் பதிவாகியுள்ளன, அந்த சந்தர்ப்பங்களில் குறுகிய காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 30 முதல் 130 விண்கற்கள் வரை அவதானிக்கப்பட்டுள்ளன.