இலங்கை உட்பட 16 நாடுகளுக்கு தைவானின் சுற்றுலா விசா தடை செய்யப்பட்டுள்ளது

16-countries-including-sri-lanka-will-be-banned-from-taiwan-tourist-visas

தைவான் (Taiwan) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கையர்களுக்கான சுற்றுலா வீசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. தைவான் வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சேவைகள் பணியகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வீசா விதிமுறைகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், இது அந்நாட்டால் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட நாடுகளுக்கான வீசா கட்டுப்பாட்டுக் கொள்கையின் திருத்தமாகச் செயல்படுகிறது.




இந்த புதிய முடிவின்படி சுற்றுலா நோக்கங்களுக்காக வீசா பெறுவது தடைசெய்யப்பட்டாலும், இலங்கையர்கள் வேறு சில துறைகளின் கீழ் தைவானுக்குச் செல்ல தொடர்ந்து வாய்ப்பு உள்ளது. தைவான் அரச நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அழைப்புடன் கூடிய பயணங்கள், கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள், மூன்றாம் தலைமுறை உறவினர்களைச் சந்திக்கும் பயணங்கள், வணிக நடவடிக்கைகள், கப்பல் ஊழியர்களாகப் பதிவு செய்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுதல் போன்ற நோக்கங்களுக்காக வீசா விண்ணப்பங்கள் தொடர்ந்து சமர்ப்பிக்கப்படலாம்.

அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பிற நோக்கங்களுக்காக வீசா விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தங்கள் விண்ணப்பங்களை இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம் (TECC) அல்லது சிங்கப்பூரில் அமைந்துள்ள தைபே பிரதிநிதி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு, தைவான் குடிமகனான உத்தரவாதம் அளிப்பவரின் உத்தரவாதக் கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டையின் நகல் உள்ளிட்ட ஆவணங்கள், விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு நகல், பொலிஸ் சான்றிதழ், நிதித் திறனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், தங்குமிடம் பற்றிய தகவல்கள் மற்றும் திரும்பும் விமான டிக்கெட் போன்ற பல ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




தைவான் அரசாங்கம் இலங்கை உட்பட ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஈராக், அல்ஜீரியா பங்களாதேஷ், கமரூன், காம்பியா, கானா, ஈராக், நைஜர், நைஜீரியா, செனகல், சோமாலியா மற்றும் சிரியா போன்ற பல நாடுகளை அதிக குடியேற்ற அபாயமுள்ள நாடுகளாகப் பெயரிட்டுள்ளது. கடந்த காலத்தில் தைவானின் ‘புதிய தெற்கு நோக்கிய கொள்கையின்’ கீழ் இலங்கையர்களுக்கு சுற்றுலா வீசா பெறுவதில் சில தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், வீசா காலாவதியான பின்னரும் தங்கியிருத்தல், சட்டவிரோத வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு அபாயங்களைக் குறைப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கையாக இந்த சுற்றுலா வீசா இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இலங்கையர்களுக்கான சுற்றுலா வீசாக்களை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தாலும், தைவான் குடிமக்களின் திருமணமான துணைவர்கள், குழந்தைகள், இராஜதந்திரிகள் மற்றும் மனிதாபிமான தேவைகள் உள்ளவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான குடியேற்றத் தரவுகள் மற்றும் இராஜதந்திரத் தேவைகளுக்கு ஏற்ப இந்தக் கொள்கைகள் அவ்வப்போது மாறக்கூடும் என்பதால், எதிர்காலப் பயணங்களுக்குத் தயாராகும் நபர்கள் தைவான் வெளிநாட்டு சேவைகள் பணியகத்தின் (BOCA) உத்தியோகபூர்வ வலைத்தளம் அல்லது அருகிலுள்ள தைவான் பிரதிநிதி அலுவலகம் மூலம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்ப்பது பொருத்தமானது.

Post a Comment

Previous Post Next Post