முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜயலத் பண்டார திஸாநாயக்க நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி ஒருவரிடம் 27,500,000 ரூபாவை மோசடி செய்த சம்பவத்தின் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிதி மோசடி தொடர்பில் வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசேட விசாரணையை ஆரம்பித்திருந்தது. அந்த விசாரணைகளின்படி செயற்பட்ட அதிகாரிகள் நேற்று (14) காலை ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரான முன்னாள் மாகாண சபை உறுப்பினரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜயலத் பண்டார திஸாநாயக்க இன்று (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.