கடவுச்சீட்டு வழங்கல்கள் 34,878 இனால் குறைந்துள்ளன

passport-issuance-has-decreased-by-34878

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்டுகள்) வழங்கப்படுவது கடந்த ஆண்டை விட கணிசமாகக் குறைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தரவுகள் காட்டுகின்றன. ஜனவரி மாதத்தில் 65,351, பெப்ரவரியில் 54,161 மற்றும் மார்ச் மாதத்தில் 50,356 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, காலாண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 169,868 ஆகும்.




எவ்வாறாயினும், 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் முறையே 53,216, 74,402 மற்றும் 77,128 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மொத்த கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 204,746 ஆகும். அதன்படி, இது 34,878 கடவுச்சீட்டுகள் குறைவானதாகும். ஜனவரி மாதத்தைத் தவிர, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த வழங்கல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. குறிப்பாக, பெப்ரவரி மாத இறுதியில் ஏற்பட்ட மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையுடன் வெளிநாடுகளுக்குச் செல்வது மந்தமடைந்ததால் கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவது குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதால், நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 609,446 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மைய காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட ஆண்டுகளாக 2022 மற்றும் 2023 கருதப்படுகின்றன. அந்த ஆண்டுகளில் முறையே 911,757 மற்றும் 908,722 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டில் இது 586,970 ஆகக் குறைந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post