ஏ.எஸ்.பி.யின் வீட்டு அலமாரியில் 3 குண்டுகள்

3-bombs-in-the-closet-of-asps-house

நத்தாரன்பொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வாடகை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தயாரிப்பு உயிருள்ள மூன்று கைக்குண்டுகளும் ஒரு வாளும் கண்டிப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மூன்று உயிருள்ள கைக்குண்டுகள் வீட்டில் இருந்த அலமாரியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விடுமுறை எடுத்து வீட்டுக்கு வரும் சந்தர்ப்பங்களில் உறங்கும் அறையின் கட்டிலுக்கு அடியில் வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணம் காங்கேசன்துறை பிரதேசத்தில் கடமையாற்றும் இந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவனால் தனக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக மனைவி கடந்த 17ஆம் திகதி மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தார். வீட்டில் இருந்த இந்த ஆயுதங்கள் அவதானிக்கப்பட்ட பின்னர் மனைவி பொலிஸாரிடம் சம்பந்தப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.




இந்தச் சம்பவம் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பல்லேகல பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள போதிலும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர். மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்தினாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் கண்டிப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், எதிர்காலத்தில் அந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் விரிவாக விசாரணை நடத்தப்படவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post