பிரதமர் ஹரினி அமரசூரிய அம்மையார் கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வந்திருந்த சந்தர்ப்பத்தில், அவரது வருகையை தொலைநோக்கி மூலம் அவதானித்ததாகக் கூறப்படும் மூவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த மூன்று சந்தேகநபர்களில் இருவர் சகோதரர்கள் ஆவர் என்பதுடன், அவர்கள் கிண்ணியா மற்றும் மொல்லிப்பொத்தானை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலதிக அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் வசிக்கும் குறிப்பிட்ட இடங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இவர்கள் கொழும்பு பிரதேசத்தில் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினாலும், தற்போது கொழும்பில் தங்கியிருக்கும் குறிப்பிட்ட தங்குமிடம் அல்லது இடம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த சந்தேகநபர்கள் தொலைநோக்கி ஒன்றைப் பயன்படுத்தி குறித்த அவதானிப்பை மேற்கொண்ட விதம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இந்த அவதானிப்பு இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கடந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்தி அதற்குரிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் கொம்பனித்தெரு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.